UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM
ADDED : ஜூன் 26, 2021 07:04 PM
மதுரை:
பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்களை அடையாளம் காண கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை கோமஸ்பாளையத்தை சேர்ந்த முத்துச்செல்வம் தாக்கல் செய்த பொதுநல மனு:
தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, 2017 - 18ல் தமிழகத்தில் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு இடைநின்ற மாணவர்கள், 6 முதல், 14 வயதிற்கு உட்பட்டோரில், 38 ஆயிரத்து, 362 பேர். அரசு தரப்பில் முறையாக ஆய்வு செய்யாததால் புள்ளி விபரங்கள் மாறுபடுகின்றன. கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. &'ஆன்லைனில்&', மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதில் நடைமுறை சிரமங்களை அரசு பள்ளிகள் சந்திக்கின்றன.
குடும்ப ஏழ்மையால், பல மாணவர்கள் வேலைக்கு செல்கின்றனர். பள்ளி இடைநின்ற, 6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களை அரசின் வழிகாட்டுதல்படி அடையாளம் காண வேண்டும். அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம், &'தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்&' என்றனர்.
