UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM
ADDED : ஜூன் 26, 2021 07:21 PM
புதுடில்லி:
&'பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், உள்மதிப்பீட்டு வழிமுறையில் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 31ல் அறிவிக்கப்படும்&' என, ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒ.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை, கொரோனா காரணமாக மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது.
உள்மதிப்பீட்டு நடைமுறையின் அடிப்படையில் அடுத்த மாதம் 31க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என, சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான மாநிலங்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வை நடத்த அனுமதி கோரி, ஆந்திர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆந்திர அரசின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்ததுடன், கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கையும் விடுத்தது.
இதையடுத்து, பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்வதாக ஆந்திர அரசு அறிவித்தது. உள்மதிப்பீட்டு வழிமுறையை பின்பற்றி அடுத்த மாதம் 31ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், ஆந்திர அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
