ஐ.ஐ.டி.,யில் பேராசிரியர் ராஜினாமா: ஜாதி பாகுபாடு உள்ளதாக கடிதம்
ஐ.ஐ.டி.,யில் பேராசிரியர் ராஜினாமா: ஜாதி பாகுபாடு உள்ளதாக கடிதம்
UPDATED : ஜூலை 03, 2021 12:00 AM
ADDED : ஜூலை 03, 2021 04:23 PM
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., யில், ஜாதி பிரச்னை காரணமாக, கேரளாவை சேர்ந்த பொருளியல் பேராசிரியர் விபின் ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.,யில் அவ்வப்போது மாணவர்கள், பேராசிரியர்கள் இடையே, ஜாதி பிரச்னைகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக, தீண்டாமை பிரச்னை, மாணவர் தற்கொலை, மாணவர் இயக்கங்களின் போராட்டம் போன்ற பிரச்னைகளும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. அந்த வரிசையில், கேரளாவை சேர்ந்த உதவி பேராசிரியர் விபின் புதியடத்து வீட்டில் என்பவர், ஜாதி பிரச்னைகளை காட்டி, தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து, ஐ.ஐ.டி., நிர்வாகத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:
சென்னை ஐ.ஐ.டி.,யில், என் பணியை ராஜினாமா செய்கிறேன். இதற்கு, நான் பணியாற்றும் மானுடவியல் மற்றும் அறிவியல் பிரிவில், ஜாதி பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதே காரணம். அரசியல் மற்றும் பாலினத்தை தாண்டி, அதிகாரத்தில் இருக்கும் சில தனி நபர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதுகுறித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன்.
ஐ.ஐ.டி.,யின் புள்ளி விபர கணக்கின்படி, ஐ.ஐ.டி.,யில் ஜாதி பிரச்னை என்பதே இல்லை. ஆனால், நடைமுறையில் ஜாதி பிரச்னைகள் அதிகமாக உள்ளன.தாழ்த்தப்பட்ட, பட்டியலின மற்றும் மிக பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்களின் அனுபவத்தை வைத்து, இங்குள்ள ஜாதி பிரச்னைகள் குறித்து, ஆய்வு செய்ய கமிட்டி அமைக்க வேண்டும்.
அந்த கமிட்டியில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் இடம் பெற வேண்டும்.ஜாதி பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், குறை தீர் கமிட்டி மற்றும் நீதிமன்றத்தை அணுகி புகார்களை அளித்தால் தீர்வை பெறலாம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
