UPDATED : ஜூலை 07, 2021 12:00 AM
ADDED : ஜூலை 07, 2021 06:58 PM
சென்னையை சேர்ந்த, &'நேர்வழி இயக்கம் டிரஸ்ட்&' நிர்வாக அறங்காவலர் கணேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு:
கொரோனா வைரஸ் முதல் பரவலின் போது, ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, 2020 மார்ச்சில் பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டாவது அலையால், மீண்டும் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன.
ஓராண்டுக்கும் மேலாக, மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்கின்றனர்.டில்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் பல்கலை நடத்திய ஆய்வில், பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி விட்டனர். அதனால், பல்கலைகள், கல்லுாரிகளை திறக்கும் நடவடிக்கைகளில் உள்ளனர். எனவே, மாணவர்களுக்கு அவசரமாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.
பஞ்சாப், கேரளாவில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உயர் கல்வியில், 3.70 கோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசி செலுத்தினால், விரைவில் கல்லுாரிகளை திறக்க முடியும்.
பல்கலை மற்றும் உயர் கல்வி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு, உடனடியாக தடுப்பூசி செலுத்த, புதிய திட்டத்தை வகுக்கும்படி உத்தரவிட வேண்டும். தடுப்பூசி செலுத்திய மாணவர்கள், வகுப்புகளில் நேரில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தது.
