அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் வர அனுமதி
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் வர அனுமதி
UPDATED : ஜூலை 14, 2021 12:00 AM
ADDED : ஜூலை 14, 2021 01:34 PM
சேலம்:
சேலம் மாவட்டத்தில், நிலுவை பணிகளை முடித்த பள்ளிகளில், சுழற்சி முறையில் ஆசிரியர்கள் வர, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி அனுமதியளித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகளில் முழு செயல்பாடுகள் இல்லை. ஜனவரி முதல், பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புகளும், மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டன. பள்ளிகளில் உள்ள நிர்வாக பணிகள், மாணவர் சேர்க்கை உள்ளிட்டவைகளுக்காக பள்ளிகள் செயல்பட அரசு அனுமதியளிக்கப்பட்டது. இதற்காக, ஆசிரியர்களை சுழற்சி முறையில் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்பி, எமிஸ் பதிவு, மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்குதல், வளாக சுத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, சி.இ.ஓ., உத்தரவிட்டிருந்தார். இதில் அதிருப்தியடைந்த ஆசிரியர்கள், பல்வேறு தரப்பில் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் எமிஸ் பணிகள், மாற்று சான்றிதழ் வழங்குதல், பதவி உயர்வு சார்ந்த பணிகளை முடித்த பள்ளிகளில், ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வரலாம் என, முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி அனுமதியளித்துள்ளார்.
