UPDATED : ஜூலை 17, 2021 12:00 AM
ADDED : ஜூலை 17, 2021 09:07 AM
புதுடில்லி:
சிவில் சர்வீஸ் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் பட்டப் படிப்பு சான்றிதழ் சமர்ப்பிக்காத காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஐந்து தேர்வர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்க உச்ச நீதிமன்றம் சிறப்பு அனுமதி அளித்தது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு 2020 அக்டோபரில் நடந்தது. இறுதி நிலை தேர்வு ஜனவரியில் நடந்தது. இறுதி தேர்வு எழுதுவதற்கு முன் பட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்ததற்கான சான்றிதழ்களை தேர்வர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கொரோனா தொற்று காரணமாக பல்வேறு பல்கலைகள் தேர்வு முடிவுகளை வெளியிட தாமதமானது. இதனால் இறுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த நிலையிலும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை தாமதமாக சமர்ப்பித்த ஐந்து தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது பட்டப்படிப்பு சான்றிதழ்களை சமர்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு மாணவர்கள் பொறுப்பல்ல என்பதால் இதை சிறப்பு வழக்காக கருதி அவர்கள் ஐந்து பேரையும் நேர்முக தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
