மதுரை காமராஜ் பல்கலை., இணைவிப்பு கட்டணம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை காமராஜ் பல்கலை., இணைவிப்பு கட்டணம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : ஜூலை 24, 2021 12:00 AM
ADDED : ஜூலை 24, 2021 10:44 AM
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையின் கீழ் இயங்கும் தனியார் கல்லுாரிகளில் சுயநிதி படிப்புகளுக்கு ஒரு பாடத்திற்கு ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் இணைவிப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பல்கலையின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரிகள் நிர்வாகிகள் சங்க பொதுச் செயலாளர் தாக்கல் செய்த மனு:
மதுரை காமராஜ் பல்கலையின் இணைவிப்பு பெற்ற பல்வேறு கல்லுாரிகள் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளன. இக்கல்லுாரிகளின் சுயநிதி பட்டப்படிப்புகளுக்கு ஒவ்வொரு படிப்பிற்கும் ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் இணைவிப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என பல்கலை பதிவாளர் 2016 ஜூலை 1 ல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டது. நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, டி.சிபி சக்கரவர்த்தி ஆஜராகி வாதிட்டதாவது:
மதுரை காமராஜ் பல்கலைக்கு தனி சட்டம், விதிமுறைகள் உள்ளன. இதன்படி பல்கலையை நிர்வகிக்க செனட், சிண்டிகேட், அகாடமிக் கவுன்சில் உள்ளன. இதற்கு தனித்தனி அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. செனட், சிண்டிகேட் 2006ல் இயற்றிய தீர்மானம் அடிப்படையில் இணைவிப்பு கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2006லிருந்து நிலுவைத் தொகையுடன் செலுத்தத் தவறினால் இணைவிப்பு ரத்து செய்யப்படும் என 2016ல் உத்தரவிடப்பட்டுள்ளது.
செனட் உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமைப்பு. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை சிண்டிகேட்டிற்கு சட்டப்படி எவ்வித பங்கும் இல்லை. செனட்டின் அதிகாரத்தை சிண்டிகேட் எடுத்துக் கொள்ள முடியாது. சிண்டிகேட் விதிகளை மீறியுள்ளது. செனட் தீர்மானத்திற்கு பல்கலை வேந்தரின் (கவர்னர்) ஒப்புதல் தேவை. இணைவிப்பு கட்டணம் நிர்ணயம் செய்ய இறுதியாக 1988 ல் வேந்தரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
தற்போது இவ்விவகாரத்தில் வேந்தரின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றனர்.பல்கலை தரப்பு வழக்கறிஞர், &'மனுதாரர் செனட் தீர்மானத்தை எதிர்த்து வழக்குத் தொடரவில்லை. மனுதாரருக்கு பல்கலை அனுப்பிய கடிதம் அடிப்படையில் மட்டும் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்ய வேண்டும்,&' என்றார்.
நீதிபதி உத்தரவு: செனட்தான் உயர்ந்த அதிகாரம் படைத்த அமைப்பு. பல்கலை சட்டப்படி இணைவிப்பு கட்டணத்தைப் பொறுத்தவரை செனட்தான் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்க வேண்டும். செனட் நிறைவேற்றிய சட்டத்திற்கு வேந்தரின் ஒப்புதல் கிடைக்கும் வரை அது செல்லுபடியாகாது. இதில் வேந்தரின் ஒப்புதல் பெறப்படவில்லை. வேந்தரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம்.
ஏற்கனவே தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இவ்விவகாரத்தில் மனுதாரர் சங்கத்திடம் ஆலோசித்து பல்கலை முடிவெடுக்க வேண்டும் என இந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கைகளின் விளைவாக மனுதாரர் சங்கம் மீண்டும் இந்நீதிமன்றத்தை நாடியுள்ளது. சிண்டிகேட் தீர்மானம் அடிப்படையில் செனட் தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதமானது. பல்கலை பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றார்.
