UPDATED : நவ 20, 2009 12:00 AM
ADDED : நவ 20, 2009 11:28 AM
தனியார் கல்லூரிகளில் உள்ள தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது கட்டாயம், என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் பேசினார்.
தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நீராவி மூலம் சமையல் செய்வதற்கு சூரிய ஒளியை பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கை நடத்தின. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணை வேந்தர் மன்னர் ஜவகர் பேசியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தேர்வு நடத்தும் முறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றன. மாணவர்கள் காப்பியடிக்காமல் தேர்வு எழுதும் வகையில் தேர்வு நடக்கும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை, பல கல்லூரிகளில் பின்பற்றப்படாமல் உள்ளதால், நிறைய கல்லூரிகள் மீது மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். கேமராக்கள் பொறுத்தப்பட்டால், மாணவர்கள் மனதில் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு ஏற்பட்டு தேர்வை சரியாக எழுதுவர். எனவே, அனைத்து கல்லூரி நிர்வாகிகள் மற்றும் முதல்வர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜவகர் கூறினார்.
