குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்
குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்
UPDATED : நவ 20, 2009 12:00 AM
ADDED : நவ 20, 2009 05:59 PM
கோவை: ‘டிவி’ சீரியல்களை பார்த்து நேரத்தை வீணடிப்பதை விட்டு, விட்டு குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்,” என்று மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறினார்.
பொது நூலகத் துறையின் சார்பில் 42வது தேசிய நூலக வார நிறைவு விழா, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. விழாவில் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா பேசியதாவது:
வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் நூலகங்களில் கற்கலாம். இங்குள்ள புத்தகங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நூலகமும் வாசகருக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் நூலகத்தையும் புத்தகங்களையும் பத்திரமாக பராமரித்து வைக்க நூலகர் கவனமாக இருக்க வேண்டும்.
கிழிந்து, நைந்து போன புத்தகங்கள், வாசகர்களின் மனதில் வாசிப்பை ஊக்குவிக்காது. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை சமூகத்தில் ஊக்குவிக்க வேண்டும். வாசிக்க நேரம் இல்லை என கூறி விட்டு ‘டிவி’ சீரியலைப் பார்த்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கும் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.
வாசிப்புக்கென தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். நூலகங்களுக்கு நல்ல பழைய புத்தகங்களை நன்கொடையாக அளிக்கலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் வெற்றி பெற நூலகங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு, அன்சுல் மிஸ்ரா பேசினார்.
மாநகராட்சி மேயர் வெங்கடாசலம் பேசுகையில், “இன்று வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. அந்தக் காலத்தில் சர்வசாதாரணமாக பெரிய நாவல்களை படித்து முடிப்போம். இப்போது ‘டிவி’ நம்மை சாப்பிடவும் விடுவதில்லை; படிக்கவும் விடுவதில்லை. மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் உள்ள ‘ரிசர்வ் சைட்’ களில் தலா ஒரு நூலகம் கட்ட அனுமதி கொடுக்கலாம். இன்று ஏராளமானோர் ஐ.ஏ.எஸ்., தேர்வுகள் எழுதுவதால், அதிக நூலகங்களை துவங்குவது உதவிகரமாக இருக்கும்,” என்றார்.
தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ் பாரி 10 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்கு முன் நூலகங்களுக்கு நன்கொடை வழங்கிய சிலருக்கு நூலக புரவலர் பட்டயம் வழங்கப்பட்டது. துணை மேயர் கார்த்திக், மாவட்ட நூலக அலுவலர் மனோகரன், வாசகர் வட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், மண்டலத் தலைவர்கள் பைந்தமிழ் பாரி, செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
