தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் செம்மொழி மாநாட்டில் கல்லூரிகளின் பங்களிப்பு

தமிழ் செம்மொழி மாநாட்டில் கல்லூரிகளின் பங்களிப்பு

தமிழ் செம்மொழி மாநாட்டில் கல்லூரிகளின் பங்களிப்பு


UPDATED : நவ 25, 2009 12:00 AM

ADDED : நவ 25, 2009 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2009 12:00 AM ADDED : நவ 25, 2009 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பற்றிய கலந்தாய்வுக் கூட்டம், கோவை பாரதியார் பல்கலையில் நடந்தது.


உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாரதியார் பல்கலை மற்றும் கோவை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள், தாளாளர்கள் பங்கேற்றனர்.


கோவையில் ஜூனில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கல்லூரிகளின் பங்களிப்பு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மாநாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கத் தயாராக உள்ளதாக கோவை, ஈரோடு பகுதிகளில் உள்ள முக்கிய கல்லூரிகளின் தாளாளர்கள் உறுதி அளித்தனர்.


பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன்: பாரதியார் பல்கலையின் கீழ் இரண்டு லட்சம் மாணவர்கள், 4,600 பேராசிரியர்கள், கோவை அண்ணா பல்கலையின் கீழ் 172 கல்லூரிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள், என மொத்தம் ஐந்து லட்சம் பேர் உள்ளனர். மாநாடு தொடர்பாக அரசு அளிக்கும் பணிகளை நிறைவேற்ற காத்திருக்கிறோம்.


தமிழக உயர்கல்வி செயலர் கணேசன்: மாநாட்டில் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களையும் பங்கேற்க செய்ய கல்லூரி நிர்வாகிகள் உறுதி அளிக்க வேண்டும். அப்போதுதான் மாநாட்டில் உயர்கல்வித் துறைக்கு சிறப்பு கிடைக்கும். சீருடை உள்ளவர்கள் கல்லூரி பேனர்கள், பேண்டு வாத்தியங்களுடன் பேரணியில் அணிவகுத்து வரலாம். சீனாவில் நடந்த ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை விட மாநாடு சிறப்பாக அமைய வேண்டும். ஜூன் மாதத்துக்குள் கல்லூரியிலும் மண்டல அளவிலும் நான்கைந்து முறை ஒத்திகை பார்த்து விட வேண்டும்.


ஒவ்வொரு கல்லூரியிலும் கலைகளில் ஆர்வம் உள்ள மாணவர்களை, மாநாட்டையொட்டி நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.


மாவட்ட கலெக்டர் உமாநாத்: மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டினரை வழிநடத்த சில துடிப்பான, பொறுப்பு மிக்க மூத்த மாணவர்கள் தேவை. இம்மாணவர்களை இப்போதே கல்லூரிகள் தேர்வு செய்து விட வேண்டும். மாநாடு பணிகளை கவனிப்பவர்களின் தங்கும் வசதியை கல்வி நிறுவனங்கள் ஏற்க வேண்டும்.


நகரை அழகுப்படுத்தவும் அதற்கேற்ற மாணவர்களை அளித்து கல்லூரிகள் ஒத்துழைக்க வேண்டும். பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை அரசே நிறைவேற்றும். இதைத் தவிர அவ்வப்போது எழும் புதிய தேவைகளையும் நிறைவேற்ற கல்லூரி நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும்.


அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி: எவ்வளவு செலவு ஆனாலும், அரசியல் குறுக்கீடுகள் இருந்தாலும் மாநாடு சிறப்பாக நடத்தப்படும். ஒவ்வொரு கல்லூரிகளும் தங்கள் தனித்திறமைகளுடன் பங்கேற்க வேண்டும். கருத்தரங்குகளில் அதிக மாணவர்களையும் பேராசிரியர்களையும் அதிகளவில் பங்கேற்கச் செய்து, மாநாட்டை பிரமாண்டமாக நடத்த வேண்டும்.


இறுதியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:


மாநாட்டை சிறப்பாக நடத்துவது பற்றி தினமும் முதல்வர் கருணாநிதி கூட்டங்கள் நடத்தி வருகிறார். அனைத்து மாணவர்களையும் பங்கேற்கச் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் படித்த அனைவருக்கும் தமிழ் உணர்வு இருக்க வேண்டுமென்பதில்லை. தமிழ் படிப்பது வேறு; தமிழ் உணர்வு வேறு. தமிழ் உணர்வு உள்ளவர்கள் அதிகம் கொண்ட பகுதி கோவை. ஒரு மாநாட்டை <உ<லக அளவில் கொண்டு செல்வது ஊர்வலம்தான். அதை பிரமாண்டமானதாக நடத்த வேண்டும். தமிழ் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் தமிழ் குறித்த கருத்தரங்கம் உண்டு. உள்ளே நடக்கும் தமிழ் ஆய்வரங்கங்கள் அல்லாமல், வெளியே சுவையான பட்டிமன்றம், கருத்தரங்கங்களும் உண்டு.


ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் குறைந்தது 100 வாகனங்களை ஊர்வலத்தில் பங்கேற்கச் செய்யலாம். புதுப் புது உத்திகளை திட்டமிட்டு கையாளலாம். ஐந்து லட்சம் மாணவர்களில் மூன்று லட்சம் மாணவர்கள் பங்கேற்றால், உலகமே கோவையை வியந்து பார்க்கும். மாணவர்கள் மத்தியில் மொழி உணர்வை ஊக்குவிப்பதுதான் மாநாட்டின் நோக்கம். மாநாட்டின் ஐந்து நாட்களிலும் சிறப்பாக பங்கேற்கும் மூன்று கல்லூரிகளுக்கு தமிழக முதல்வர் விருது வழங்குவார். மாநாட்டுக்கான சிறப்பு குழுவை முதல்வர் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு, அமைச்சர் பொன்முடி பேசினார்.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆறு தீர்மானங்கள்:
கோவையில் செம்மொழி மாநாடு நடத்த முடிவு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி. மாநாட்டில் அனைத்துக் கல்லூரிகளும் சீருடையுடன் பங்கேற்க வேண்டும். கூட்டத்தினரை வழிநடத்தவும் ஒழுங்கு செய்யவும் தேவையான மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். விருந்தினர்களை கல்லூரி விடுதிகளில் தங்க வைக்க வேண்டும். மாநாடு சிறப்பாக நடைபெற தேவையான பிற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us