டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 முடிவு வெளியிட இடைக்கால தடை
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 முடிவு வெளியிட இடைக்கால தடை
UPDATED : டிச 05, 2009 12:00 AM
ADDED : டிச 05, 2009 04:43 PM
சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வுப் பட்டியலை வெளியிட, டிச. 10ம் தேதி வரை சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவர் தாக்கல் செய்த மனு:
கடந்த 2006-07ம் ஆண்டுக்காக, 172 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த தேர்வில் நானும் கலந்து கொண்டேன். ஆரம்ப கட்ட தேர்வு 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. பின், பிரதான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும், டிசம்பர் மாதம் நேர்முகத் தேர்வும் நடந்தது.
கடந்த ஜனவரி மாதம் மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன. ஜூலை மாதம் ஒதுக்கீடு உத்தரவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்ததால், இறுதித் தேர்வு பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால், நியமன உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை.
ஐகோர்ட் உத்ரவைத் தொடர்ந்து, நியமன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட பணிகளில் சேர்வதற்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. மொத்தம் 172 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். பல்வேறு காரணங்களினால், தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் பணி நியமனத்தை ஏற்கவில்லை. எனவே, அந்த காலியிடங்களில் காத்திருப்போர் அல்லது வரிசைப் பட்டியலில் இருந்து நிரப்ப வேண்டும்.
வரிசைப் பட்டியலில் நான் ஐந்தாவது இடத்தில் உள்ளேன். 30 நாட்களுக்குள் பணியில் சேரவில்லை என்றால், அந்த இடங்களில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தோ அல்லது ரேங்க் பட்டியலில் இருந்தோ தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரை 10 பேர் நியமன உத்தரவை ஏற்கவில்லை. சிலர், பணியில் சேர விருப்பம் இல்லை என கடிதமும் அளித்துள்ளனர்.
இதற்கிடையில், 2008-09ம் ஆண்டுக்கான குரூப் - 1 பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. டிசம்பர் 3, 4ம் தேதிகளில் நேர்முகத் தேர்வும் நடக்கிறது. இதனால், ஏற்கனவே உள்ள காத்திருப்போர் பட்டியல் காலாவதியாகி விடும். மேலும், நாங்கள் பாதிக்கப்படுவோம். எனவே, கடந்த 2007-08, 2008-09ம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் தேர்வுப் பட்டியலை வெளியிட்டால், 2006-07ம் ஆண்டுக்கு தேர்வு எழுதியவர்களின் காத்திருப்போர் பட்டியல் காலாவதியாகி விடும்; எனக்கும் பணி நியமனம் கிடைக்காமல் போய் விடும். எனவே, 2007-08, 2008-09ம் ஆண்டுக்கான குரூப் - 1 இறுதித் தேர்வு பட்டியல், ஒதுக்கீடு உத்தரவை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று ஜெயக்குமார், ராஜா என்பவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை நீதிபதி தனபாலன் விசாரித்தார். மனுக்களுக்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி தனபாலன் உத்தரவிட்டார். டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு முடிவை, டிச. 10ம் தேதி வரை வெளியிட வேண்டாம் என உத்தரவிட்டு, விசாரணையை டிச. 9ம் தேதிக்கு நீதிபதி தனபாலன் தள்ளி வைத்துள்ளார்.
