UPDATED : டிச 10, 2009 12:00 AM
ADDED : டிச 10, 2009 06:03 PM
கோவை: ""பள்ளி அருகில் குளம், குட்டை, கிணறு போன்றவை இருக்கக் கூடாது. கல்வி அலுவலர்கள் எந்த பள்ளிக்கு சென்றாலும் அங்குள்ள பாதுகாப்பு அம்சங்களை முதலில் ஆராய வேண்டும். பள்ளிகளில் விழா, நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக் கூடாது. மாணவர்களின் பாதுகாப்புக்குப் பின்தான் படிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்,&'&' என்று தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறினார்.
கோவையில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்றுனர் கலந்துரையாடல் கூட்டத்தில் தேவராஜன் பேசியதாவது:
வேதாரண்யம் வேன் விபத்து போல் இனி மாணவர்களை பாதிக்கும் எந்த விபத்து நடந்தாலும், அதற்கு பள்ளி ஆசிரியர்கள்தான் பொறுப்பு என்றாகி விட்டது. மாணவர்களின் பாதுகாப்பில் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கல்வி ஆய்வாளர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை என்ற புகார் வந்துள்ளது.
பள்ளி அருகில் குளம், குட்டை, கிணறு போன்றவை இருக்கக் கூடாது. கல்வி அலுவலர்கள் எந்த பள்ளிக்கு சென்றாலும் அங்குள்ள பாதுகாப்பு அம்சங்களை முதலில் ஆராய வேண்டும். பள்ளிகளில் விழா, நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக் கூடாது. மாணவர்களின் பாதுகாப்புக்குப் பின்தான் படிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
பெரும்பாலான பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறை சிறப்பாக உள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களிடம் தாமாக கேள்வி கேட்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வருங்காலங்களில் இந்த மாணவர்களுக்கு பாடத்தை புகட்டுவது எளிது.
படைப்பாற்றல் கல்வியிலும் இதே போல் நம் மாணவர்கள் சாதனை புரிய செய்வது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கைகளில்தான் உள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க ஒவ்வொரு ஆசிரியர் பயிற்றுனரும், ஆசிரியரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மெள்ளக் கற்கும் குழந்தைகள், மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் பாதிப் பேர்தான் முதல் வகுப்பில் உள்ளனர். பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் உள்ளனர்.
சில பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கையை விட அதிக மாணவர்கள் உள்ளனர். அப்பள்ளிகளின் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். தற்போது இருக்கும் ஆசிரியர்களை பயன்படுத்தி கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும். இவ்வாறு, தேவராஜன் பேசினார்.
