‘இளநிலை பட்டப்படிப்புடன் கூடிய பி.எட். படிப்பு அறிமுகம்’
‘இளநிலை பட்டப்படிப்புடன் கூடிய பி.எட். படிப்பு அறிமுகம்’
UPDATED : டிச 17, 2009 12:00 AM
ADDED : டிச 17, 2009 02:48 PM
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் கல்விமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:
ஆசிரியர் கல்வியியலுக்கு என்று ஒரு தனி பல்கலைக்கழகம் எதற்காக? இதன் செயல்பாடுகள் என்ன?
தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, கடந்த 2008 ஜூன் மாதம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. தமிழகத்தில் பிற பல்கலைக்கழகங்களின்கீழ் இருந்த கல்வியியல் கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகள், 623 சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் கல்வியியல் தரத்தை உயர்த்துவது, மனித நேயம், மனித உரிமைகள், மதிப்புக் கல்வி போன்றவற்றை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது, ஆசிரியர் கல்வியியலில் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை இப்பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கம். பல்கலை ஆரம்பிக்கப்பட்டு ஓர் ஆண்டு 6 மாதங்களில் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அங்கீகாரம் கிடைத்துள்ளது.
போதிய உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் இல்லாமல் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் செயல்படுவதாக புகார்கள் கூறப்படுகிறதே. இதில் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை என்ன?
இதுகுறித்த சில புகார் பல்கலைக்கழகத்திற்கும் வந்துள்ளது. இதன்பேரில் ஆட்சிமன்ற குழு உறுப்பினர், பல்கலை பதிவாளர், அனுபவமிக்க ஆசிரியர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு அந்த கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது. அதில் போதிய வசதிகள் இல்லாத கல்லூரிகள் மீது பல்கலைக்கழக இணைப்பு ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்.
தமிழகத்தில் ஏராளமான ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இவற்றில் படித்து முடிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளதா?
நாடெங்கிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. மேலும் பி.எட்., எம்.எட். படித்தவர்கள் ஆசிரியராக மட்டும்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. கல்வி ஆலோசகர், போட்டித் தேர்வு போன்ற பல்வேறு இதர வாய்ப்புகளும் உள்ளன. சுயநிதி கல்வியியல் போதுமான அளவில் துவங்கப்பட்டு விட்டதால், இனி புதியதாக கல்வியியல் கல்லூரிகள் துவக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இப்பல்கலைக்கழகத்தின் எதிர்கால திட்டங்கள் என்ன?
2009-10ம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் வழங்கப்படும் பி.எட்., எம்.எட். படிப்புகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டமும், தேர்வுமுறைகளும் கடைபிடிக்கப்பட உள்ளன. ‘ஹெல்த்’ மற்றும் யோகா கல்வி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் பி.ஏ. அல்லது பி.எஸ்சி. படிப்புடன் பி.எட். படிப்பையும் சேர்த்து 4 ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட கல்வியை இப்பல்கலைக்கழகம் வழங்க உள்ளது. இதன்படி தமிழ், ஆங்கிலம், சமூகவியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இளநிலை பட்டத்தை இப்பல்கலைக்கழகம் வழங்க உள்ளது. இந்த படிப்பானது போதிய வசதிகளைக் கொண்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும். தற்போது இருந்து வரும் ஓர் ஆண்டு பி.எட். படிப்பும் தொடர்ந்து வழங்கப்படும்.
முன்பு, அந்தந்த கல்லூரிகளிலேயே மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட நிலையில், கடந்த தேர்வுகளின்போது தேர்வு மையங்கள் மாற்றப்பட்டன. இதேமுறை தொடர்ந்து நீடிக்கும். மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி இவற்றில் அந்தந்த மாணவர்களின் போட்டோ இடம்பெறும். பல்கலைக்கழக மானியக் குழுவிடம் நிதி ஒதுக்கீட்டை பெறும் வகையில் பல்கலைக்கழகத்தில் 6 துறைகள் துவங்கப்பட உள்ளன. அதன்படி, இப்பல்கலையிலேயே முழுநேர முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்.) வழங்கப்படும்.
மாணவர்களிடம் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் 2010 பிப்ரவரியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ‘ஸ்போர்ட்ஸ் மீட்’ நடைபெற உள்ளது. 2010ல் ஜூன் மாதம் கோவையில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டில் இப்பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.
ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
கோதாரி கமிஷன் கூறியதுபோல, ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகுப்பின் கதாநாயகனாக விளங்கும் ஆசிரியர் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய இடத்தை பெறுகிறார். ஒவ்வொரு ஆசிரியரும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
