UPDATED : டிச 17, 2009 12:00 AM
ADDED : டிச 17, 2009 05:39 PM
கோவை: “கனடா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள ‘கம்யூனிட்டி காலேஜ்’ திட்டத்தை நம் நாட்டிலும் அமல்படுத்தலாம்,” என்று தொழில் நுட்ப கல்வி இயக்கக துணை இயக்குனர் கோவிந்தராஜன் கூறினார்.
சி.ஐ.டி. சேன்ட்விச் பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ‘வேலை வழிகாட்டி மற்றும் ஆளுமைத் திறன் வளர்ப்பு’ குறித்த கருத்தரங்கு, கல்லூரியில் நடந்தது. கருத்தரங்கில் சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின் துணை இயக்குனர்(தேர்வு வாரியம்) கோவிந்தராஜன் பேசியதாவது:
சிங்கப்பூர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஒரு இயந்திரத்தின் தன்மையைப் பற்றி விளக்கி கூறுவர். அதன்பின் மாணவர்களே சுயமாக திட்டமிட்டு அந்த இயந்திரத்துக்கு செயல்வடிவம் கொண்டு வர வேண்டும். பின்னர் ஆசிரியர்களின் துணையுடன் முழு வடிவத்தை ஏற்படுத்த வேண்டும்.
கனடா போன்ற நாடுகளில் ‘கம்யூனிட்டி காலேஜ்’ என்ற அமைப்பின் மூலம், ஒரே இடத்தில் அனைத்து துறைகளுக்கான கல்வியும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதே போல் நம் நாட்டிலும் அமல்படுத்தலாம். ஒரு விஷயம் பற்றிய கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்றம், நிகழ்கால தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பை படிக்கும் போதே எளிதாக பெற முடியும். இவ்வாறு, கோவிந்தராஜன் பேசினார்.
கல்லூரி முதல்வர் கருப்பண்ணன் பேசுகையில், “மாணவர்கள் தங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் கற்றால் எளிதில் வெற்றி பெற்று விடலாம்,” என்றார். கருத்தரங்கில் 300 மாணவ மாணவியர், பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
