கள்ளர் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
கள்ளர் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
UPDATED : டிச 26, 2009 12:00 AM
ADDED : டிச 26, 2009 05:49 PM
மதுரை: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், கள்ளர் சீரமைப்புத் துறை நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 260 பள்ளிகள், 52 விடுதிகள் உள்ளன. இவற்றில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 45. இந்த பள்ளிகளை அரசு புறக்கணிப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கள்ளர் பள்ளிகளில் 110 பட்டதாரி ஆசிரியர்கள், 52 முதுகலை ஆசிரியர்கள், 40 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாத இந்த இடங்களில் கடந்த அக்., 26, 27, 28ம் தேதிகளில் நேர்முக தேர்வு நடந்தது. மூன்று மாதங்களாகியும், இதுவரை தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை பணியிடங்களில் நியமிக்கவில்லை. இதனால் பொதுத் தேர்வு நெருங்கும் நிலையில், மாணவர்களின் படிப்பு கெடும் சூழ்நிலை உள்ளது.
மாநில பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து, பள்ளிகளின் காலிப் பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான இந்த உத்தரவு, கள்ளர் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மாற்றி, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஆசிரியர் நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் சின்னப்பாண்டி தெரிவித்துள்ளார்.
