UPDATED : டிச 28, 2009 12:00 AM
ADDED : டிச 28, 2009 11:15 AM
டி.ஏ.வி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 27 ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்ற அவர், தற்போது ஆர்.எம்.கே., குழும பள்ளிகளின் சீனியர் முதல்வராக இருக்கிறார். குடியரசுத் தலைவரிடமிருந்து சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது பெற்றவர் அவர்.
அனைத்து மாணவர்களும் மனது வைத்தால் நூறு சதவீத மதிப்பெண்களைப் பெற முடியும் என்று கூறும் சதீஷ், பிளஸ் 2 மாணவர்களுக்கு கூறும் ஆலோசனைகள்:
முதலாவதாக ஒரு பாடத்தில் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை வேகமாகவும் அதேசமயத்தில் கவனமாகவும் படித்துப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே இப்பாடத்தை நடத்தும் போது ஆசிரியர்கள் கொடுத்துள்ள கூடுதல் தகவல்களையும் படித்துப் பார்க்க வேண்டும். சில பாடங்களுக்கான சுருக்கத்தையும் படித்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்துப் பாடங்களின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்கள் தெரிகிறதா என்று மாணவர்கள் சோதித்துப் பார்க்க வேண்டும். வேறு எந்த வகையில் கேள்விகள் கேட்க சாத்தியமாக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன், இந்த பாடத்தில் அரசு பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எந்தக் கேள்விகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதில்களை படிக்க வேண்டும். கேள்விக்கான பதில்கள் தெரியாவிட்டால் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தயக்கம் காட்டக்கூடாது. படித்த பாடங்களை மனதில் சொல்லிப் பார்க்க வேண்டும். கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லிப் பார்க்க வேண்டும். படித்த பாடத்தை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு தனி அறையில் ஆசிரியரைப் போல, பாடம் நடத்துவது போல பாடங்களை சப்தமாக சொல்லிப் பார்க்க வேண்டும். கடினமான கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லிப் பார்க்க தவறிவிடக்கூடாது. அப்போதுதான் கஷ்டமான கேள்விகள் தேர்வில் வந்தாலும், அதனை எளிதாக எழுதிவிட முடியும்.
மாணவர்கள் தங்களுக்கே ஒரு டெஸ்ட் வைத்துக் கொண்டு பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தாங்களே டெஸ்ட் வைத்துக் கொண்டு தேர்வு எழுதிப் பார்க்கும் மாணவர்கள் பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். இதற்காக மூன்று மணி நேரத் தேர்வுதான் வைத்துப் பார்க்க வேண்டும் என்பதில்லை. எந்தக் கேள்வியை கடினமாகக் கருதுகிறீர்களோ அதை எழுதிப் பார்த்தால், விடைகள் மனதில் நன்கு பதியும். நிச்சயமாக நினைத்த இலக்கை அடைய முடியும். தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க விரும்பும் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் தெளிவாக படித்திருக்க வேண்டும்.
தேர்வு நேரத்தில் உடலை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். கவனம் சிதறக்கூடாது. திரைப்படம், தொலைக்காட்சி பார்ப்பதில் பொழுதைக் கழிக்கக்கூடாது. நண்பர்களுடன் ஊர்சுற்றக்கூடாது. இதுபோன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். தேர்வு நேரத்தில் விருப்பமான நேரத்தில் படிக்கலாம். ஆனால், குறைந்தது 6 மணி நேரம் உறங்க வேண்டும். எந்த மாணவர்களும் தொடர்ந்து படிக்க இயலாது. அவ்வாறு படித்தால் அது மனதில் பதியாது. சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும். ஓய்வு நேரத்தில் விளையாடலாம். படுத்துத் தூங்கலாம். அதற்காக நண்பர்களுடன் ஊரைச் சுற்ற வேண்டாம்.
பாடம் தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால் ஆசிரியரிடம் கேட்கலாம். படிப்பில் ஏற்படும் சந்தேகங்களைக் கேட்கத் தயங்கக்கூடாது.
உங்களுக்கு தனிப்பட்ட முறையிலோ, படிப்பிலோ ஏதேனும் கவலை அல்லது பிரச்சினை தோன்றினால் உடனே அதுகுறித்து பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களிடம் தெரிவித்து உரிய பரிகாரம் காண வேண்டும்.
வீட்டில் அனைவரும் வந்து போகிற அறை அல்லது பால்கனி அருகே அமர்ந்து படித்தால் உங்களது கவனம் சிதறிவிடும். இதனால் உங்களது படிக்கும் நேரம் விரயமாகும் சூழ்நிலை ஏற்படும். வீட்டில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கும் அறையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்காதீர்கள். வீட்டில் தனி அறை இருந்தால், அமைதியாக அங்கு அமர்ந்து படிக்க வேண்டும். அந்த அறை காற்றோட்டம் உள்ள வெளிச்சமானஅறையாக இருக்கட்டும். தேர்வுக்குத் தேவையான பாடப்புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் பத்திரமாக வைக்க வேண்டும். தேர்வு நேரத்தில் அதில் ஏதாவது ஒரு புத்தகம் காணாமல் போய்விட்டால் அதைத் தேடுவதே பெரிய காரியமாகி விடும் என்பதை மறக்காதீர்கள்.
பாடங்களைப் படிப்பதற்கு ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் எதைப் படிக்க வேண்டும் என்பதற்கான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு படிக்க வேண்டும். கஷ்டமான பாடங்களை கடைசி நேரத்தில் படிக்காமல், முதலிலேயே படித்து விடுவது, அதன் மூலம் ஒரு பெரிய சுமையை இறக்கி வைத்தது போல இருக்கும்.
தேர்வு நேரத்தில் மாணவர்கள் பரபரப்புக்கு ஆளாகிறார்கள். இது தேவையில்லை. இந்த பரபரப்பினால் சிலருக்கு ஜுரம், தலைசுற்றல், பசியின்மை, வாந்தி போன்றவை ஏற்படக்கூடும். தேர்வு நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்படக் கூடாது. உடல் நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. தேர்வு பயத்தினால் இரவு முழுவதும் தூங்காமல் தொடர்ந்து இடைவிடாமல் படித்து விட்டு தேர்வு எழுத வராதீர்கள். அதனால் உடல்நலக் குறைவு ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அத்துடன் தேர்வை கவனமாகவும் எழுத இயலாது. தேர்வு நேரத்தில் மனதை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் தேர்வு பயத்தைத் தவிர்க்க முடியும்.
தேர்வு நேரத்தில் காலி வயிற்றில் பசியுடன் படிக்க உட்காரதீர்கள். அதற்காக மூக்குபிடிக்க சாப்பிடவும் வேண்டும். சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள். படிக்கும்போது நிமிர்ந்த நிலையில் உட்கார வேண்டும். சாய்வாகவோ, தொய்வாகவோ உட்காரக்கூடாது. படிக்கும்போது சிறிது சலிப்போ, களைப்போ ஏற்பட்டாலோ அல்லது தூக்கம் வருவது போல் இருந்தாலோ படிக்கும் இடத்தை விட்டு எழுந்து பத்து நிமிடங்கள் நடந்து, முகத்தைக் கழுவி புத்துணர்ச்சி பெறலாம். நீங்கள் படிக்கும் பகுதிகளை எளிதாகப் படித்து முடிக்கும் வகையில் சிறு சிறு பாகங்களாகப் பிரித்துப் படியுங்கள். படங்களை வரைந்து பார்க்கலாம். கணக்குகளைப் போட்டுப் பார்க்க வேண்டும். முக்கியமான சில கேள்விகளை எழுதிப் பார்ப்பதன் மூலம் தேர்வில் சிரமமின்றி எழுத முடியும்.
மாணவர்கள் தங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கக்கூடாது. எதனையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். தயவு செய்து உங்களது திறமையையும் உழைப்பையும் நம்புங்கள். அதைவிட அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள். அந்த மூடநம்பிக்கை உங்களை எதிர்மறை குணமுள்ளவராக மாற்றி விடும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் முழுமனதோடு உழைப்பவர்களையே அதிஷ்ட தேவதை கண்திறந்து பார்ப்பாள். வெற்றிக்கு அடிப்படை கடின உழைப்பு. தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்!
நீங்கள் சாதனையாளர்கள் என யாரை நினைக்கிறீர்கள். அந்த சாதனையாளர்கள் எடுத்த முயற்சியை நீங்கள் எடுத்திருக்கிறீர்களா என்று பாருங்கள். அந்த சாதனையாளர்கள் எடுத்த முயற்சிகளை நீங்களும் எடுத்தால் உங்களையும் வெற்றி தேடி வரும். நன்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கடமை உணர்வும் உங்களுக்கு இருந்தால் போதும் வெற்றிக்கனி உங்கள் மடியில்!
தேர்வுக்கு செல்லும்போது மறக்காதீங்க!
தேர்வு நடைபெறும் இடத்திற்கு தேர்வு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவது நல்லது. இதனால் தேர்வு மையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு பதட்டம் ஏற்படுவதைத் தடுக்க முடியும். தேர்வுக்கு முதல் நாளிலேயே தேர்வுக்குக் கொண்டு செல்ல வேண்டிய பேனா, பென்சில், ரப்பர், ஜியோமிதி பாக்ஸ், ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தேர்வுக் கால அட்டவணையை அனைவருக்கும் தெரிகிற மாதிரியான இடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் எந்தத் தேதியில் எந்தத் தேர்வு என்பது குறித்த சந்தேகம் எழாது.
தேர்வு மையத்திற்கு முன்னதாகச் சென்று விட்டாலும் தேர்வு மையத்தில் யாருடனுடன் தேவையில்லாமல் அரட்டை அடித்துக் கொண்டிருக்கக்கூடாது. இந்த பாடத்தில் கேள்விகள் கேட்கப்படலாம் என்று சக மாணவர்கள் கூறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இதனால் உங்களது கவனம் திசை திரும்பும். தேர்வு மையத்திற்கு வந்த பிறகு, சிறிது நேரம் முக்கியக் குறிப்புகளை ஒரு முறை திருப்பிப் பார்த்த பிறகு, தேர்வை எதிர் கொள்ள அமைதியாக இருக்க வேண்டும். தேர்வில் தெரிந்தோ தெரியாமலோ புத்தகமோ பேப்பரையோ எடுத்துக் கொண்டு போகக்கூடாது. தேர்வு கூடத்தில் உங்களிடம் எழுதப்பட்ட காகிதங்களோ புத்தகங்களோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், நீங்கள் அந்தத் தேர்வை தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படமாட்டீர்கள்.
தேர்வு அறைக்குள் நுழைந்து மாணவர்கள் தங்களுக்குரிய இடத்தை கண்டு பிடித்து அமர வேண்டும். அங்கு சிறிது நேரம் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைவதற்கு வாய்ப்புண்டு.
தேர்வு அறையில் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் பதற்றப்படாமல் படித்துப் பார்க்க வேண்டும். கடினமான, தெரியாத கேள்விகள் வந்திருந்தாலும் அதைப் பார்த்து பதட்டப்படக்கூடாது. தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதவும். இப்படிச் செய்தால் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும். மற்ற கேள்விகளுக்கான பதில்களும் எளிதாக ஞாபகத்தில் வரும். தேர்வு எழுதும் போது கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்.
தேர்வு அறையில் அருகில் இருக்கும் மாணவர்களிடமிருந்து பேனா போன்ற பொருட்களை வாங்கக்கூடாது. மாணவர்களுடன் பேசக் கூடாது. தேர்வு அறையில் ரிலாக்ஸ் ஆக அமர வேண்டும். தேர்வு மையத்தில் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கக்கூடாது. தேர்வு எழுதுவதிலேயே முழு கவனம் செலுத்த வேண்டும்.
தேர்வு நேரமான மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக, எந்தக் காரணம் கொண்டும் தேர்வு அறையை விட்டு வெளிய வர வேண்டாம். தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக விடைகளை எழுதி முடித்து விட்டு, அந்த நேரத்தை எழுதிய விடைகள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். விடைத்தாளில் உங்களது தேர்வு எண்ணை சரியாக எழுதியிருக்கிறீர்களா என்பதை சரிபார்க்க மறக்காதீர்கள். விடைத்தாளில் கேள்விக்கான எண் சரியாக இருக்கிறதா என்பதையும் சரிபார்க்க மறக்க வேண்டாம். விடைத்தாளை உங்களது மேஜையிலேயே வைத்துப் போகாமல், தேர்வு அறையில் உள்ள கண்காணிப்பாளர் வசம் ஒப்படைக்க வேண்டும்.
