அறிவியல் தொழில்நுட்ப கல்லுாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
அறிவியல் தொழில்நுட்ப கல்லுாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 09:24 AM
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில், ஆசாதிசாட் 2 என்ற சிறிய செயற்கைக்கோள், நாடு முழுதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவியர் வாயிலாக உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் கடந்த பிப்ரவரியில் விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள் உருவாக்கும் திட்டத்தில், தமிழகத்தில் இருந்து எட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவியர் பங்கேற்றனர். அவர்களுடன் கவர்னர் ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி, சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உலகமே முன்னேறி வருகிறது. நம் நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள 1,000 பல்கலை மற்றும் 40 ஆயிரம் கல்லுாரிகளில், 75 சதவீதம் கலை சார்ந்த படிப்புகளே உள்ளன. கலை சார்ந்த படிப்புகள் மோசமானவை என நான் கூறவில்லை. இருந்தாலும் அறிவியல் தொழில்நுட்ப கல்லுாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம். தமிழகத்தில், 74 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும், 26 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளிலும், மேல்நிலைப் படிப்புகளை படிக்கின்றனர்.அரசு பள்ளி மாணவியர் செயற்கைக்கோள் உருவாக்க ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஊக்கப்படுத்தி உள்ளது. அதில் அரசு பள்ளி மாணவியரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அரசு பள்ளி மாணவர்கள் இதுபோல மேலும் நிறைய பங்களிப்புகளை, தனியார் பள்ளி மாணவர்களையும் தாண்டி வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.சென்னையைச் சேர்ந்த நான்கு அரசு பள்ளிகள், மதுரை மாவட்டம் திருமங்கலம், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு பள்ளிகளைச் சேர்ந்த 130 மாணவர்கள் ஆசாதிசாட் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கவர்னர் செயலர் ஆனந்த்ராவ் பாட்டீல், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீமதி கேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
