UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 09:41 AM
மதுரை மகாத்மா காந்தி நகர் கோவிந்தன். மதுரை காமராஜ் பல்கலையில் எஜூகேசனல் மல்டி மீடியா ரிசர்ச் சென்டர் (இ.எம்.எம்.ஆர்.சி.,) ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து 2006ல் ஓய்வு பெற்றார். ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். பணப் பலன்களை வழங்க பல்கலை நிர்வாகத்திற்கு 2019ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் பல்கலை பதிவாளர் சங்கர், மதுரை கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி கோவிந்தன் மனு செய்தார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு:
மனுதாரர் இறந்துவிட்டார். அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் வழக்கை நடத்துகின்றனர். ஓய்வூதிய பலன்களை இதுவரை வழங்கவில்லை. இதற்கு பல்கலை தரப்பு கூறிய காரணம் ஏற்புடையதல்ல. ஓய்வு பெற்று பணப் பலன்களை பெற 16 ஆண்டுகள் காத்திருக்க முடியாது. மனுதாரர் இறந்துவிட்ட சூழ்நிலையில் அவரது குடும்பத்தினர் தொகையை பெற முடியாமல் தவிப்பது பரிதாபமாக உள்ளது.மனுதாரரின் குடும்பத்தினர் பல்கலையின் இரக்கமற்ற அதிகாரிகளிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. இது பல்கலைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர பொருத்தமான வழக்கு.அவமதிப்பு நடவடிக்கையை துவங்குவதற்கு முன் விளக்கம் பெற ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம். ஏன் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்பதற்கு விளக்கமளித்து அப்போதைய அதிகாரிகளான பல்கலை பதிவாளர் சங்கர், மதுரை கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் ஜூன் 21ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.
