உயிர் வேதியியல் பட்டப்படிப்புக்கு ஆசிரியர் தகுதி இல்லை!
உயிர் வேதியியல் பட்டப்படிப்புக்கு ஆசிரியர் தகுதி இல்லை!
UPDATED : டிச 30, 2009 12:00 AM
ADDED : டிச 30, 2009 05:36 PM
கோவை: தமிழகத்தில் உயிர் வேதியியல் படிப்பு படித்த பட்டதாரி ஆசிரியர்கள், வேதியியல் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய தகுதி இல்லை என அரசு உத்தரவிட்டுள்ளதால், இப்படிப்பை முடித்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேதியியல் பட்டமும், உயிர் வேதியியல் பட்டமும் ஒன்றுதான் என 1998 அக். 22ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது(அரசாணை எண்.254). உத்தரவின்படி, பி.எஸ்சி, பயோ கெமிஸ்ட்ரி படிப்பு, பி.எஸ்சி., கெமிஸ்ட்ரி படிப்புக்கு இணையானது. இந்த உத்தரவு தந்த தைரியத்தால் பலர் உயிர் வேதியியல் படிப்பில் பட்டப்படிப்பை முடித்து, அதே படிப்பில் பி.எட்., பட்டமும் பெற்றனர்.
அரசாணையின்படி, தமிழக அரசுப் பள்ளிகளில் நிறைய உயிர் வேதியியல் பட்டதாரிகளை அறிவியல் உதவி ஆசிரியர்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் நியமித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2009 நவ. 16ல் வெளியான அரசாணை(எண்.38561), ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. புதிய அரசாணையில், ‘உயிர் வேதியியல் மற்றும் பி.எட்., பட்டம் பெற்றவர்கள் அறிவியல் உதவி ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் பணிபுரிய தகுதியற்றவர்கள்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் உயிர் வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
புதிய உத்தரவால், ஏற்கனவே பணிபுரிபவர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் இப்படிப்பை முடித்த பல்லாயிரக்கணக்கானவர்களின் வேலை வாய்ப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இது பற்றி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், “உயிர் வேதியியல் பட்டம் பெற்றவர்கள், அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய தகுதியுள்ளவர்கள்தான் என, ஏற்கனவே ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி அரசும் ஆணை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய அரசு உத்தரவால் எங்கள் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் அரசு தலையிட்டு, தீர்வு காண முன்வர வேண்டும்,” என்றனர்.
