UPDATED : ஜூன் 21, 2023 12:00 AM
ADDED : ஜூன் 21, 2023 11:36 AM
மாணவர்களுக்கு உயர்கல்வி தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக 2022 ஜூலையில் திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம், ஒட்டன்சத்திரம், விருதுநகர் திருச்சுழி, நெல்லை மானுார், திருச்சி மணப்பாறை, விழுப்புரம் செஞ்சி உட்பட 20 கலை அறிவியல் கல்லுாரிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அந்தாண்டே மாணவர் சேர்க்கை துவங்கி வகுப்புகள் நடக்க ஏதுவாக பிற அரசு கலைக் கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி, இணை பேராசிரியர்கள் 150 பேருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டது.ஆனால் புதிய கல்லுாரிகளுக்கு முதல்வர்கள், யு.ஜி.சி., தகுதியுள்ள 1800க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாற்றுப்பணிக்கு சென்ற பேராசிரியர்களின் பணி தேவையில்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாற்றுப்பணி உத்தரவை ரத்து செய்து பழைய கல்லுாரிக்கே திரும்ப உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். ஆனால் நடவடிக்கை இல்லை. பலர் இந்தாண்டு ஓய்வு பெற உள்ளநிலையில் தினம் 100 கி.மீ.,க்கு மேல் பயணித்து மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் கூறியதாவது:
இக்கல்வியாண்டு துவங்கி மாணவர்கள் சேர்க்கைக்கு பின் மாற்றுப்பணி உத்தரவு ரத்து செய்யப்படும் என கல்லுாரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் தெரிவித்தது. ஆனால் ஜூன் 19 கல்லுாரிகள் துவங்கியும் இதுவரை நடவடிக்கை இல்லை. மாறாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் பெயரை கூறி சிலர் பேராசிரியர்களிடம் லட்சங்களில் பணம் கறந்து மாற்றுப்பணியை ரத்து செய்து கொடுக்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். இப்படி சில பேராசிரியர்கள் பழைய கல்லுாரிக்கு சென்று விட்டனர். மீதமுள்ளோரிடமும் அதிகாரிகள் இதேபோல் பணம் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து பழைய கல்லுாரிக்கு மீண்டும் செல்ல உடனடியாக உத்தரவிட வேண்டும், என்றனர்.
