UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM
ADDED : ஜூன் 24, 2023 10:00 AM
திருப்பூர்:
தினமலர் நாளிதழ் சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்-2023 வழிகாட்டி நிகழ்ச்சி நாளை திருப்பூர், தாராபுரம் ரோட்டிலுள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் இன்ஜி., படிப்புகள் குறித்த மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும், நிபுணர்களிடம் இருந்து நேரடியாக விளக்கத்தை பெறலாம்.இன்ஜி., படிப்பில் சேர கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறீர்களா? எந்த படிப்புகளில் சேருவது, எந்த கல்லுாரியை தேர்வு செய்வது போன்ற, குழப்பங்கள் உள்ளதா? உங்களுக்காகவே, தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடிட்யூட் ஆப் டெக்னாலஜி சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி-2023 நிகழ்ச்சி வரும் 25ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை, கோர் இன்ஜி., படிப்புகளுக்கான வாய்ப்புகள், எந்த கட்-ஆப் எந்த கல்லுாரிகளுக்கு சாத்தியம், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜி., துறைகள் என, மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும், விளக்கம் பெறலாம்.கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி? என்ற தலைப்பில், கல்வி ஆலோசகர் அஸ்வின் உரையாடுகிறார். இதேபோல், இன்ஜி., கவுன்சிலிங் நடைமுறை குறித்து சென்னை அண்ணா பல்கலை மாணவர்கள் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் விளக்குகிறார். கற்பகம் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்க அனுமதி இலவசம். முன்பதிவுக்கு, www.kalvimalar.com இணையதளத்திலோ அல்லது 91505 74441 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
