UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM
ADDED : ஜூன் 25, 2023 03:20 AM
தேனி:
தேனி என்.ஆர்.டி., மண்டபத்தில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம்,கோவை வேளாண் பல்கலை இணைந்து வீட்டுத் தோட்ட செடிகள் கண்காட்சி, விற்பனை மேளா துவங்கியது.கலெக்டர் ஷஜீவனா துவங்கி வைத்தார். நேர்முக உதவியாளர் தனலட்சுமி, தோட்டக்கலை கல்லுாரி முதல்வர் ராஜாங்கம், தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய முதன்மை செயல் அலுவலர் வசந்தன் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் 20 அரங்குகளும், தனியார் நிறுவனங்கள் 40 என 60 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. எம்.எல்.ஏ., சரவணக்குமார், தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, தி.மு.க, நகரச் செயலாளர் நாராயணபாண்டி கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.முதல்வர் ராஜாங்கம் கூறுகையில், பள்ளிக் கல்லுாரி மாணவர்களுக்கு வீட்டுத் தோட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வீட்டுத்தோட்டத்திற்கான தேவையானவற்றை ஒரே இடத்தில் கிடைத்திடும் வகையிலும் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் புதிய தொழில்நுட்பத்தில் ஹைட்ரோபோனிக்ஸ் (மண்ணில்லா விவசாயம்) மூலம் வீட்டு, மாடித்தோட்டங்கள் அமைப்பது குறித்து அரங்குகள் உள்ளன. வீட்டிற்கு ஒரு தேனீ பெட்டி அமைத்தல், கண்காட்சி நடக்கும் அடுத்த 2 நாட்களில் 500 மூலிகை, செடிகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்க உள்ளோம் என்றார்.
