UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM
ADDED : ஜூன் 28, 2023 04:44 AM
கோவை:
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரேஸ்கோர்ஸ், தாமஸ்பார்க்கில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ஐ.ஜி., சுதாகர், துணை கமிஷனர் சந்தீஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர போலீஸ் சார்பாக, மாநகராட்சியுடன் இணைந்து, யங் இந்தியா உதவியுடன் போதை பொருள் பற்றிய பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட மராத்தான் நடந்தது. இதில் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். பின், உறுதிமொழி எடுக்கப்பட்டது. ரேஸ்கோர்சில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக நாடகங்கள், பாடல்கள், நடனம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ட்ரக்ஸ் ப்ரீ கோவை என்ற ஸ்லோகனுடன் முகாம் துவங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை என்ற கருத்துடன் கோவை மாவட்டம், மாநகர் என அனைத்து இடங்களிலும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு எடுத்து செல்ல இருக்கிறோம்.இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஒரு சிலரை போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்து சென்று அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
