‘அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டை வல்லரசாக்க உதவும்’
‘அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டை வல்லரசாக்க உதவும்’
UPDATED : ஜன 04, 2010 12:00 AM
ADDED : ஜன 04, 2010 10:22 AM
“இந்தியா பொருளாதார வல்லரசாக மாற அறிவியல் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றும்,” என்று, விஞ்ஞானி மாதவன்நாயர் கூறினார்.
திருவனந்தபுரத்தில் நடக்கும் 97வது அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் துவக்க உரையாற்றிய இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் பேசும்போது, “உலக அளவில் இந்தியா பொருளாதார வல்லரசாக மாற அறிவியல் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றும். “உணவு பாதுகாப்பு, குடிநீர், மின்சாரம், சுகாதாரம், தரமான கல்வி ஆகியவற்றை நாட்டின் அனைத்து மக்களுக்கும் வழங்குவதே தற்போதைய தேவை. இதற்கு தீர்வு காண்பது அவசியம். அறிவியல் கல்வியை பள்ளிகளில் இருந்தே ஊக்குவிக்க வேண்டும். “இந்த மாநாடு ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்கும் என்பதை நம்புகிறேன். அதை நிறைவேற்ற அனைவரும் தயாராக இருப்போம்,” என்றார்.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரிதிவிராஜ் சவுகான் பேசும்போது, “இந்தியா உலக அரங்கில் அறிவியல் துறையில் முதலிடத்தைப் பிடிக்கவும், இந்திய மக்கள் அனைவருக்கும் வளமான வாழ்வு கிடைக்கவும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உதவ வேண்டும்.
உணவு, எரிசக்தி, நீர், சுகாதாரம், உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதம் ஆகியவை பெரும் சவால்கள். அதை சந்திக்க அறிவியல் தொழில் நுட்பம் உதவ வேண்டும். லட்சத்தீவு மற்றும் சென்னையில் முறையே ஒரு லட்சம் மற்றும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நாள் ஒன்றுக்கு தயாரிக்கும் வகையில் கடல்நீரை குடிநீராக மாற்றும் இயந்திரங்கள் அமைக்கப்படுகின்றன. அறிவியல் ஆய்வுத் துறைகளில் தனியாரும் பங்களிக்க வேண்டும்,” என்றார்.
கேரள முதல்வர் அச்சுதானந்தன் பேசும்போது, “நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால்,
சமீபகாலமாக இளைஞர்களின் கவனம் முழுக்க தகவல் தொழில்நுட்பத் துறையின் பக்கம் திரும்பியுள்ளது. “எனவே, அவர்களின் ஆர்வத்தை அறிவியல் துறை பக்கம் திருப்ப அரசு திட்டங்களை தீட்ட வேண்டும். தேசிய நிதி அமைப்புகள் அறிவியல் கல்வியின் தரத்தை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
“கேரள அரசு அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அறிவியல் துறையில் உள்ள சவால்களை சந்தித்து தீர்வு காண இந்த மாநாடு உதவும் என நம்புகிறேன்,” என்றார். கேரள கவர்னர் கவாய், மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, சசி தரூர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் பேபி, பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ், அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
