வெளிச்சத்தை தேடும் மாணவர்கள்: அவல நிலையில் அரசுப் பள்ளி
வெளிச்சத்தை தேடும் மாணவர்கள்: அவல நிலையில் அரசுப் பள்ளி
UPDATED : ஜன 05, 2010 12:00 AM
ADDED : ஜன 05, 2010 11:49 AM
சென்னை: கல்வித்துறையின் மெத்தனத்தால் குட்டி குட்டி அறைகளுக்குள் நூற்றுக்கணக்கில் குழந்தைகளை அடைத்து வைத்த நிலையில் இயங்கி வருகிறது அரசு நடுநிலைப் பள்ளி.
கட்டடமும் பாழடைந்த நிலையில் இருப்பதால் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகே தையப்ப முதலி தெருவில் கடந்த 1920ல் துவக்கப்பட்டது என்.ஏ.பி., நடுநிலைப் பள்ளி. சேஷாசலம் என்பவரால் துவக்கப்பட்ட இந்த பள்ளி நாளடைவில் அரசுப் பள்ளியாக மாறிவிட்டது. கடந்த 87 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
கட்டட மாடிகளில் உரிமையாளர்கள் வசித்து வர, கீழ்தளத்தில் உள்ள ஒரு குட்டி அறை, மற்றொரு குட்டியூண்டு ஹாலில்தான் குழந்தைகளை ‘அடைத்து’ வைத்து வகுப்புக்கள் நடக்கின்றன. வெளிச்சமும் இல்லை, காற்றோட்ட வசதியும் இல்லை. கொஞ்சம் அப்படி இப்படிக்கூட குழந்தைகள் நகர வாய்ப்பில்லை. இதற்குள்தான் 200க்கும் மேற்பட்ட குழந் தைகளின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
கட்டடமும் பாதுகாப்பானதாக இல்லை. 120 ஆண்டுகளைக் கடந்து, இடிந்து விழுந்து எப்போது விபரீதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் குழந்தைகள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் பீதியிலேயே நாட்களை நகர்த்தி வருகின்றனர். ‘பள்ளி இயங்கும் நிலையில் கட்டடம் இல்லை என்பதால் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றுங்கள், இல்லையென்றால் அருகில் உள்ள பள்ளியோடு இணையுங்கள்’ என பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கல்வித் துறைக்கு கடிதம் மேல் கடிதம் எழுதியும் இன்னும் விடியல் ஏற்படவில்லை.
‘இதனிடையே கட்டடம் எங்களுக்கு வேண்டும்’ என உரிமையாளர்களும் ‘கிடுக்குப்பிடி’ போட இப்போது சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், கல்வித் துறை இன்னும் உரிய முடிவு எடுக்காததால், ஆபத்தான கட்டடத்தில், இருட்டறைக்குள் பிரகாசமான எதிர்காலத்தைத் தேடும் நிலை நீடிக்கிறது.
கட்டடத்தின் தன்மையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற கல்வித்துறை உரிய முடிவெடுக்க வேண்டும், இல்லாவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
