UPDATED : ஜூலை 07, 2023 12:00 AM
ADDED : ஜூலை 07, 2023 03:51 AM
சென்னை:
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது துவங்கியுள்ளது.தமிழகத்தில் 4,200 எம்.டி., எம்.எஸ்., என்ற முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 50 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளது. இப்படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2023 - 24ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று நண்பகல், 12:00 முதல், 13ம் தேதி மாலை 5:00 மணி வரை, https://www.tnhealth.tn.gov., https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், கிராமப்புற மற்றும் மலைப்பிரதேசங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில் ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
