UPDATED : ஜூலை 07, 2023 12:00 AM
ADDED : ஜூலை 07, 2023 10:34 AM
பெங்களூரு:
ஏழைகளின் பிள்ளைகள் அதிகமாக படிக்கும் பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ளது.பெங்களூரு மாநகராட்சி சார்பில் குழந்தைகள் காப்பகம், நர்சரி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை பள்ளி, கல்லுாரிகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும், இவற்றில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேருகின்றனர்.கொரோனா தொற்றுக்கு பின், மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏழைகள், நடுத்தர குடும்பங்களின் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையில் படிக்கும் பள்ளி, கல்லுாரிகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும் இல்லை. ஆண்டுதோறும் சாலைகள் சீரமைப்பு, சுரங்கப்பாதை, மேம்பாலம் கட்டுவது உட்பட பல்வேறு திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடும் பெங்களூரு மாநகராட்சி, பள்ளி, கல்லுாரிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதில், அக்கறை காண்பிக்கவில்லை.மாநகராட்சி கட்டுப்பாட்டில் 93 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில், 56 காப்பகங்களில் சிறார்களுக்கு குடிநீர் வசதியில்லை. 15 பள்ளிகளில் மாணவியருக்கும்; 12 பள்ளிகளில் மாணவர்களுக்கும் கழிப்பறை வசதியில்லை. மேலும், 12 குழந்தைகள் காப்பகத்துக்கு பெயின்ட் அடித்து பல ஆண்டுகளாகிறது. 20 பள்ளிகளில் சிறார்கள் அமரும் வகுப்பறைகள் சிதிலமடைந்துள்ளன. இவற்றை பழுது பார்க்க வேண்டியுள்ளது. தவிர, ஆறு குழந்தைகள் காப்பகங்கள் வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. குழந்தைகள் விளையாட தேவையான பொருட்கள் இல்லை; உபகரணங்களும் இல்லை. மாநகராட்சியின் 16 பள்ளிகளில் ஏழு பள்ளிகளில் மட்டும் பாதுகாப்பான அறைகள் உள்ளன.மற்ற பள்ளிகளுக்கு 28 வகுப்பறைகள் தேவை. 18 பி.யு.சி., கல்லுாரிகளில் எட்டு கல்லுாரிகளுக்கு, 44 வகுப்பறைகள் வேண்டும். நான்கு பட்டப் படிப்பு கல்லுாரிகளில் மூன்று கல்லுாரிகளுக்கு 13 வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும். மேலும், எட்டு துவக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப், 11 பள்ளிகளில் ஆய்வகம், 10 பள்ளிகளில் நூலகம் இல்லை. நிதி பற்றாக்குறை காரணமாக, இவற்றை நிறைவேற்ற முடியாமல், மாநகராட்சி திணறி வருகிறது.
