UPDATED : ஜன 07, 2010 12:00 AM
ADDED : ஜன 07, 2010 11:33 AM
சென்னையில், அண்ணா பல்கலைக்கழகத்தின், ‘இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்’ துறை சார்பில், தொழில் துறையில் பொறியியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்த, சர்வதேச மாநாடு நேற்று துவங்கியது.
மாநாட்டை துவக்கி வைத்து, அப்துல் கலாம் பேசியதாவது:
அண்மையில் பெங்களூரில் ஒரு பன்னாட்டு, ‘சாப்ட்வேர்’ நிறுவனத்தில் சீனா, கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுனர்கள், நம் நாட்டினருடன் இணைந்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு வங்கிக்காக பணியாற்றுவதை பார்த்தேன். இதுபோன்ற எல்லைகளை கடந்து பணியாற்றும் வாய்ப்பு, உற்பத்தி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வரவேண்டும். இதன்மூலம் உலக நாடுகளுக்கு இடையே
ஒருங்கிணைப்பை ஏற்படுத்தலாம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, அனைத்துத் துறை நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும். இப்போட்டியில் வெற்றி பெற, நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் படைப்பு திறனுடன் செயல்பட வேண்டும். பணிச்சூழல், நிறுவனத்தின் மீதான பணியாளர்களின் விசுவாசம் உள்ளிட்ட பல காரணிகளின் மூலம், இப்படைப்பு திறன் அறியப்படும். ஒரு நிறுவனத்தின் மேலாளர் அனுபவமிக்க பயிற்சியாளர், ஆலோசகராக இருப்பதன் மூலம், அந்நிறுவன வளர்ச்சிக்கு, சிறப்பான பங்காற்றலாம். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தர், மன்னர் ஜவகர் பேசியதாவது:
“இந்த மூன்றுநாள் சர்வதேச மாநாட்டின் மூலம், ‘இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்’ துறை சந்தித்துவரும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து, துறை வல்லுனர் கள், தங்களின் ஆராய்ச்சி அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர். சுற்றுச் சூழல் மற்றும் உலகப் பொருளாதார பிரச்னை, உற்பத்தித் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இம்மாநாடு விவாதிக்கும்,” இவ்வாறு மன்னர் ஜவகர் பேசினார்.
மாநாட்டின் துவக்க விழாவில், ‘இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்’ துறையின் முன்னாள் விரிவுரையாளர் பாலசுப்ரமணியனுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், வாழ்நாள் சாதனையாளர் விருதை, அப்துல் கலாம் வழங்கினார். மாநாட்டு மலரையும் அவர் வெளியிட்டார்.
‘இண்டஸ்ட் ரியல் இன்ஜினியரிங்’ துறையின் தலைவர் சகாபூதின், மாநாட்டு ஒருங்கிணைப் பாளர் பால் ராபர்ட் உட் பட, பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், நியூசிலாந்து, டென்மார்க், ஈரான், நைஜீரியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த துறை வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 210 ஆராய்ச்சிக் கட்டுரைகள் மாநாட்டில் சமர்பிக்கப்பட உள்ளன.
உற்பத்தி துறையில் புதிய தொழில் நுட்பம், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அம்சங்கள் குறித்தும், மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
உலகம் அழியாது
மாநாட்டு துவக்க விழாவிற்கு பின், அப்துல் கலாம் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் 2012 ம் ஆண்டு, உலகம் அழியும் என்று யாரும் அச்சப்பட தேவையில்லை. இன்னும் ஐந்து பில்லியன் (500 கோடி) ஆண்டுகள் வரை, இயங்கும் திறனை பூமி பெற்றுள்ளது. வெளிநாட்டுவாழ் இந்திய விஞ்ஞானிகள் தான், நோபல் பரிசு பெறுவதாக சொல்லமுடியாது. சந்திரசேகர் இந்தியாவில் இருந்து தான் நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசை பெறும் திறன், இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உள்ளது. ஆனால், யாரும் நோபல் பரிசை இலக்காகக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடாது. சந்திரயான் திட்டம் தோல்வி எனக் கூற முடியாது. 50 ஆண்டுகளாக எந்த நாட்டு விஞ்ஞானிகளும் கண்டுபிடிக்காத, சந்திரனில் தண்ணீர் இருக்கும் சான்றுகளை, நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு கலாம் கூறினார்.
