UPDATED : ஜூலை 10, 2023 12:00 AM
ADDED : ஜூலை 10, 2023 05:15 PM
செங்கல்பட்டு :
செங்கல்பட்டு மாவட்டத்தில், எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. 2023 - 24ம் கல்வியாண்டில், 13,239 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், கற்போர் மையங்கள் ஏற்படுத்தி பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை மூலம், மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கணக்கெடுப்பு, கடந்த ஆண்டு நடந்தது. இந்த கணக்கெடுப்பு பணியில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில், தேசிய ஊரக வேலை வாய்ப்புதிட்டம், ரேஷன் கடை, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில், எழுத, படிக்க தெரியாத, 14 ஆயிரத்து 562 பேர் கண்டறியப்பட்டனர்.அவர்களுக்கு, கற்போர் மையம் சார்பில், தினமும் இரண்டு மணி நேரம், ஆறு மாத காலம் தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முடிந்தவுடன், அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2023 - 24ம் கல்வி ஆண்டில், 15 வயதிற்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 13 ஆயிரத்து 239 பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் அமைக்கும் பணி, கடந்த 1ம் தேதி துவங்கி, வரும் 21ம் தேதி வரை நடக்கிறது. பயிற்சி அளிப்பதற்கான தன்னார்வலர்கள் தேர்வும் நடந்து வருகிறது.குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த மையத்தில், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் பயிற்சி, ஆறு மாதங்கள் நடக்கும். இம்மையங்களை, முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில், அடிப்படை கல்வி அறிவு, எண்ணறிவு, சிக்கலான வாழ்க்கை திறன்கள், வணிகத்திறன்கள், நிதியியல் கல்வியறிவு, டிஜிட்டல் கல்வியறிவு. குழந்தைகள் பராமரிப்பு, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில், 15 வயதிற்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 13 ஆயிரத்து 239 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, கற்போர் மையத்தில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில், இந்த பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.
