UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM
ADDED : ஜூலை 11, 2023 04:02 AM
பல்லடம்:
பல்லடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ், வளர் இளம் குழந்தைகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி, பல்லடம் அடுத்த வடுகபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராணி தலைமை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா முன்னிலை வகித்தார். கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் என்ற தலைப்பில், அடுப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற குழந்தைகள், அடுப்பு பயன்படுத்தாமல், பேரீச்சை, நாட்டு சர்க்கரை, அவல், உலர் பழங்கள் உள்ளிட்ட கால்சியம் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தி சமைத்திருந்தனர். சிறப்பாக சமைத்த மாணவ, மாணவியரை தேர்வு செய்த குழுவினர், பரிசுகள் வழங்கி பாராட்டினர். பள்ளியைச் சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர். அங்கன்வாடி ஊழியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
