தனியார் பள்ளிக் கட்டணம்: அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
தனியார் பள்ளிக் கட்டணம்: அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
UPDATED : ஜன 07, 2010 12:00 AM
ADDED : ஜன 07, 2010 11:56 AM
சென்னை: தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த சட்டப் பிரிவுகளை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுப்பள்ளி முறைக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தாக்கல் செய்த மனு:
தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்கு முறைபடுத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. எந்தெந்த காரணங்களின்படி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என பல்வேறு வழிமுறைகள், சட்டத்தில் கூறப்பட்டுள்ளன. பள்ளி அமைந்துள்ள இடம், மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள், 100 சதவீத தேர்ச்சி உள்ளிட்ட முகாந்திரங்களின்படி, கட்டணம் நிர்ணயம் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சமச்சீர் கல்விக்கான அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தமிழக அரசு கொண்டு வந்த கட்டண ஒழுங்கு முறை சட்டம், சமச்சீரற்ற முறையை வளர்ப்பதாக உள்ளது. கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான முறைகளை பார்த்தால், பொருளாதார வசதியுள்ள மாணவர்கள் தான், நல்ல வசதியுள்ள பள்ளிகளில் கல்வி கற்க முடியும். இருப்போர், இல்லாதோருக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்துவதாக இது உள்ளது.
100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தால் அதன்படியும் கட்டணம் நிர்ணயிக்கலாம் என விதிமுறை உள்ளது. அந்த 100 சதவீதத்தை அந்த பள்ளி எப்படி பெற்றது என்பதை அரசு பரிசீலிக்க தவறி விட்டது. குழந்தைகளின் கருத்தை புறக்கணிக்கும் வகையில் இந்தச் சட்டப் பிரிவுகள் உள்ளன. கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தை எதிர்த்து ஆட்சேபனை தெரிவிக்க எந்த வழிமுறையும் இல்லை.
இந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து, தமிழக அரசுக்கு மனுக்கள் அனுப்பினோம். இருந்தும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப் பட்டது. இந்த கமிட்டி இரண்டு முறை கூடியது. அனைத்து தனியார் பள்ளிகளும் பிப்ரவரி முதல் வாரத்தில் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேதி நிர்ணயித்துள்ளது.
சமர்ப்பிக்கத் தவறினால், கட்டணத்தை கமிட்டி நிர்ணயித்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தக் கடிதப் போக்குவரத்து பள்ளி நிர்வாகத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் எதுவும் கேட்கவில்லை. எனவே, தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தில் சில பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும். நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் செந்தில் நாதன், கமிட்டிக்கு தடை விதிக்கக் கோரினார். அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், ‘கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு தடை விதிக்கக் கூடாது’ என்றார். சிறப்பு அரசு பிளீடர் சங்கரனும் ஆஜரானார்.
இதையடுத்து, மனுவுக்கு எட்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டது.
