பிரதமர் நரேந்திர மோடிக்கு திலகர் தேசிய விருது அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடிக்கு திலகர் தேசிய விருது அறிவிப்பு
UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM
ADDED : ஜூலை 11, 2023 04:14 PM
மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள லோக்மான்ய திலகர் நினைவு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் லோக்மான்ய திலகர் தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.இது குறித்து, அறக்கட்டளையின் தலைவர் தீபக் திலக் கூறியதாவது:
திலகர் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமருக்கு, லோக்மான்ய திலகரின் 103வது நினைவு நாளை ஒட்டி, வரும் 1ம் தேதி இந்த விருது வழங்கப்பட உள்ளது. அவர், தற்சார்பு இந்தியா திட்டத்தின் வாயிலாக, நம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளார். குடிமக்கள் மத்தியில் தேச உணர்வை எழுப்பி, நம் நாட்டை உலகளவில் தலைநிமிரச் செய்துள்ளார். அவரது விடாமுயற்சியை கருத்தில் வைத்து, திலகர் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் குழு, அவரை இந்த விருதுக்கு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அடுத்த மாதம் நடக்கவுள்ள இந்த விழாவுக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார். மஹாராஷ்டிரா கவர்னர் ரமேஷ் பயஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். கடந்த 1983ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், இந்திரா, வாஜ்பாய் உள்ளிட்டோர் பெற்றுஉள்ளனர்.
