தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சந்திரயான் - 3: நிலவில் இருந்து பூமி குறித்து முழு ஆய்வு

சந்திரயான் - 3: நிலவில் இருந்து பூமி குறித்து முழு ஆய்வு

சந்திரயான் - 3: நிலவில் இருந்து பூமி குறித்து முழு ஆய்வு


UPDATED : ஜூலை 13, 2023 12:00 AM

ADDED : ஜூலை 13, 2023 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2023 12:00 AM ADDED : ஜூலை 13, 2023 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீஹரிகோட்டா:
சந்திரயான் - 3 திட்டத்தில் புதிய முயற்சியாக, நிலவில் இருந்து பூமி குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வைத் தொடர்ந்து  பூமியைப் போல மனிதர்கள் வாழ்வதற்கு உகந்ததாக வேறு கோள்கள் உள்ளனவா என்ற ஆய்வு நடத்தப்பட உள்ளது.நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா இதுவரை இரண்டு முறை விண்கலத்தை அனுப்பியுள்ளது. முதலாவது திட்டம், 2008, அக்., 22ம் தேதி அனுப்பப்பட்டது. ஆனால், அப்போது நிலவை சுற்றி வந்து, சந்திரயான் - 1 விண்கலம் ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து, 2019, ஜூலை 22ம் தேதி இரண்டாவது விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டாலும், நிலவில் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு தோல்விஅடைந்தது. கடந்த 2019 செப்., 6ம் தேதி நிலவின் மேற்பரப்பில், விக்ரம் என, பெயரிடப்பட்ட லேண்டர் சாதனம் தரையிறங்குவதை பார்ப்பதற்காக இந்த உலகமே காத்திருந்தது.அதிர்ச்சி
விக்ரம் சாதனத்தில் உள்ளே இருந்த பிரக்யான் என பெயரிடப்பட்ட ரோவர் சாதனம் தான், நிலவின் மேற்பரப்பில் உலவி சோதனைகள் செய்ய காத்திருந்தது. ஆனால், ரோவர் சாதனம் செயல்பட முடியாமல் போனது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, இஸ்ரோ தலைவராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சிவன் கண்ணீர் விட்டதும், பிரதமர் நரேந்திர மோடி அவரைத் தழுவி ஆறுதல் சொன்னதும் மறக்க முடியாத நிகழ்வுகள். இந்நிலையில், சந்திரயான் - 3 திட்டத்தில் எந்தத் தோல்வியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.நாளை மதியம் 2:35 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, சந்திரயான் - 3 புறப்பட உள்ளது. கடந்த முறை அனுப்பப்பட்டது போலவே, இந்த முறையும் விக்ரம் லேண்டர் சாதனம், பிரக்யான் ரோவர் சாதனம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை அடங்கிய விண்கலம், எல்.வி.எம்.,  3  எம்., 4 என்ற ராக்கெட் வாயிலாக அனுப்பப்பட உள்ளது. பயில்வான் என செல்லமாக அழைக்கப்படும் இந்த ராக்கெட், அசகாய சூரன்; எவ்வளவு எடையுள்ள விண்கலத்தையும் துாக்கிச் செல்லக்கூடியவன்.முன்பு ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.,  மார்க் 3 என்ற ராக்கெட், இம்முறை எல்.வி.எம்., ராக்கெட் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் இதுவரை, ஆறு முறை மேற்கொண்ட பயணமும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. தற்போது, எல்.வி.எம்.,  3 ராக்கெட் நான்காவது பயணம் மேற்கொள்ள உள்ளது. இது, 143 அடி உயரத்துடன், எல்.வி.எம்., ரக ராக்கெட்களில் மிக நீளமானது; அதிக எடை கொண்டது. இதனால் தான், இதற்கு பயில்வான் என செல்லப்பெயரை சூட்டியுள்ளனர்.சந்திரயான் - 3 திட்டம் மூன்று கலங்களை கொண்டது. புரெபல்ஷன் எனப்படும் உந்து இயந்திரம், லேண்டர் மற்றும் ரோவர் சாதனங்கள் இதில் அடங்கும். இது தான், ராக்கெட்டின் உச்சியில் கிரீடமாக உட்கார வைக்கப்படும். நாளை இந்த ராக்கெட் செலுத்தப்பட்டாலும், அடுத்த மாதம் 23 அல்லது 24ம் தேதி தான், லேண்டர் சாதனம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும். அதுவரை இந்த விண்கலம் பூமியை 56 முறை சுற்றி வரும்.எதிர்காலத்தில் உதவும்
சந்திரயான் - 3 திட்டத்தின் மிக முக்கிய அம்சம், இம்முறை புரெபல்ஷன் எனப்படும் உந்து இயந்திரம் அனுப்பப்படுகிறது. இது, நிலவில் லேண்டர் சாதனத்தை டெலிவரி செய்ததும், அங்கிருந்து பூமியை நோக்கி நிறுத்தப்படும். இது, பூமியில் உள்ள வளங்கள், மனிதர்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும். இதன் வாயிலாக, எதிர்காலத்தில் மற்ற கோள்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான, வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய முடியும். இந்த புதிய முயற்சியில் தான், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்த புதிய ஆய்வு, விண்வெளியில் உள்ள மற்ற கோள்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும் எதிர்காலத்தில் உதவும். இதுவரை, அமெரிக்கா, சீனா, சோவியத் யூனியன் ஆகியவை மட்டுமே நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்துஉள்ளன. அந்த வரிசையில், நான்காவது நாடாக இந்தியா இடம் பெறுவதுடன், எதிர்கால ஆய்வுக்கு கருவூட்டும் வகையிலும், சந்திரயான் - 3 திட்டத்தை செயல்படுத்த விஞ்ஞானிகள் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டுஉள்ளனர்.ஜூலை மாதம் ஏன்?
 சந்திரயான் - 2 விண்கலம், 2019 ஜூலை 22ல் அனுப்பப்பட்டது; தற்போது, நாளை அனுப்பப்பட உள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஜூலை மாதத்தில் தான், பூமியும், நிலவும் கிட்டத்தில் இருக்கும். ராக்கெட் செலுத்தப்பட்டதும், 16வது நிமிடத்தில், புரெபல்ஷன் கலம், ராக்கெட்டில் இருந்து தனியாக பிரிந்து செல்லும். இது, பூமியை 56 முறை சுற்றி வரும். பூமியில் இருந்து குறைந்தபட்சம், 170 கி.மீ., துாரத்திலும், அதிகபட்சம், 36,500 கி.மீ., துாரத்திலும் சுற்றி வரும். இதன் வாயிலாக கிடைக்கும் வேகம் தான், நிலவு வரை செல்ல உதவும். ராக்கெட்டில் இருந்து பிரிந்ததும், ரோவர், லேண்டர் சாதனங்களுடன் கூடிய புரெபல்ஷன் கலம், நிலவை நோக்கி பயணிக்கும். நிலவில் இருந்து 100 கி.மீ., துாரத்தை எட்டிய பின், லேண்டர் சாதனம் பிரியும் நிலவின் வடக்கு துருவத்தை விட, தென் துருவம் பரப்பளவு அதிகம். மேலும், இது எப்போதும் பூமிக்கு எதிர்பக்கத்தில் இருப்பதால் இருட்டாகவே இருக்கும். அதனால் தான், தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரோவர் சாதனம் நிலவில் தரையிறங்கிய பின், ஒரு நிலவு நாள் மட்டுமே அது செயல்படும். ஒரு நிலவு நாள் என்பது, பூமியை பொறுத்தவரை 14 நாட்களுக்கு சமமாகும். அதன்பின், அதன் ஆயுள் காலம் முடிந்துவிடும். அதற்குள், நமக்கு தேவையான தகவல்களை அது திரட்டி தரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us