புத்தக தடை எதிர்த்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
புத்தக தடை எதிர்த்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM
ADDED : ஜூலை 14, 2023 08:46 AM
சென்னை:
மதுரை வீரனின் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கை விசாரிக்க, மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.குழந்தைராஜ் என்ற குழந்தை ராயப்பன் என்பவர் எழுதிய, மதுரை வீரனின் உண்மை வரலாறு என்ற நுாலுக்கு, தமிழக அரசு 2015ல் தடை விதித்தது. ஆதி தமிழர் பேரவை வெளியிட்ட இந்த புத்தகத்தில், ஆட்சேபனைக்கு உரிய கருத்துக்கள், திரித்து எழுதப்பட்ட தகவல்கள், பல சமூகத்தினரை புண்படுத்தும் வகையிலான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என கூறி அதை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.நுாலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, 2017ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் குழந்தை ராயப்பன் வழக்கு தொடர்ந்தார். மனுவில், புத்தகத்தில் மதுரை வீரனின் வீரத்தை குறிப்பிட்டு தான் எழுதியுள்ளேன். ஜாதி ரீதியாக எதுவும் இல்லை. எனவே, தடையை நீக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், புத்தகம் 2013ல் வெளியிடப்பட்டு, 2,000 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில் பேச்சு, கருத்துரிமைக்கு தடை விதிக்க முடியாது என வாதிடப்பட்டது.அரசு தரப்பில், புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு, பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதனால் தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது. சி.ஆர்.பி.சி., எனும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 96ன்படி, புத்தகங்களை பறிமுதல் செய்ததை எதிர்த்த வழக்குகளை மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு தான் விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு, இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
