தேசிய கல்வி கொள்கையால் தாய் மொழி கல்விக்கு பாதிப்பு
தேசிய கல்வி கொள்கையால் தாய் மொழி கல்விக்கு பாதிப்பு
UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM
ADDED : ஜூலை 15, 2023 09:33 AM
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலையில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய கல்வி கொள்கையால் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் தாய் மொழிக்கல்வியை பறிக்கும் அபாயம் உள்ளதாக கலை இலக்கியப் பெருமன்றம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து புதுச்சேரி கலை இலக்கிய மன்ற தலைவர் சிவக்குமார், பொதுச்செயலாளர் பாலகங்காதரன் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி பல்கலை, வரும் கல்வி ஆண்டில் இருந்து தேசிய கல்விக் கொள்கையை இணைப்பு கல்லுாரிகளில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையில் மொழிப்பாடங்களுக்கான பாடநேரம் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் தாய்மொழி பாட அறிவை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், தெலுங்கு இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிப்பாடங்களையும் மாணவர்கள் தற்போது உள்ளவாறு கற்க இந்தக் கல்வி கொள்கையால் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்கால சந்ததியினர் சிந்திக்கும் ஆற்றலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கல்லுாரிகளில் மொழிப்பாட ஆசிரியர்களின் வேலை வாய்ப்பு பறிபோக உள்ளது. மேலும், படித்துவிட்டு காத்திருக்கும் மாணவர்களுக்கும் இனி வேலைக்கான வாய்ப்பில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ளது போல தமிழையும் ஆங்கிலத்தையும் இரண்டு ஆண்டுகள் நான்கு பருவங்களும் மாணவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
