தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் 3வது மருத்துவ கல்லுாரி திறப்பு
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் 3வது மருத்துவ கல்லுாரி திறப்பு
UPDATED : ஜூலை 17, 2023 12:00 AM
ADDED : ஜூலை 17, 2023 10:10 AM
சென்னை:
பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை வளாகத்தில், மூன்றாவது மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.பெரம்பலுார், தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் திறப்பு விழா, வேந்தர் சீனிவாசன் தலைமையில், பல்கலை வளாகத்தில் நடந்தது. பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் கற்பகம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை திறந்து வைத்தார்.அவர் பேசுகையில், கல்வி, தொழில் துறையை போல, மருத்துவ துறையிலும், பெரம்பலுார் முன்னேறிய மாவட்டமாக மாற, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை பெரும் உதவியாக இருக்கும். இந்த நிறுவனத்தின் மருத்துவ சேவை, கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் என்றார்.போலீஸ் எஸ்.பி., ஷியாமளா தேவி பேசுகையில், மக்கள் தெய்வமாக பார்க்கும் துறையில், முதலில் ஆசிரியர்கள் உள்ளனர். இரண்டாவது காவல் துறையினர், மூன்றாவது மருத்துவ துறையினர் உள்ளனர். இந்த மூன்றில் இரண்டு துறையினரின் சேவைகளை, தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் வழங்குகிறது என்றார். பல்கலை வேந்தர் சீனிவாசன் பேசுகையில், தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் மருத்துவமனை, சமூகத்துக்கு மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்கும். இங்கு, 650 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்துடன் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும செயலர் நீலராஜ், அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜபூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் அங்கையற்கண்ணி, எம்.எல்.ஏ., பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் வரதராஜன், கிறிஸ்டியன் கல்வி நிறுவன செயலர் மித்ரா, பல்கலை துணை வேந்தர் ரஞ்சன், மருத்துவக் கல்லுாரி டீன்கள் லலிதா, விஸ்வநாதன் பங்கேற்றனர். இணை வேந்தர் அனந்தலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.
