ஐ.ஐ.டி.,க்களில் பெண்களின் பங்கு; முதல் பெண் இயக்குனர் கவலை
ஐ.ஐ.டி.,க்களில் பெண்களின் பங்கு; முதல் பெண் இயக்குனர் கவலை
UPDATED : ஜூலை 17, 2023 12:00 AM
ADDED : ஜூலை 17, 2023 10:13 AM
புதுடில்லி:
ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், பெண்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர், என ஐ.ஐ.டி.,யின் முதல் பெண் இயக்குனர் ப்ரீத்தி அகாலயம் தெரிவித்து உள்ளார்.கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவின் சான்சிபார் என்ற இடத்தில், சென்னை ஐ.ஐ.டி., முதன்முறையாக அதன் வளாகத்தை அமைக்கிறது. இதன் வாயிலாக, சர்வதேச வளாகம் ஒன்றை துவங்கும் நாட்டின் முதல் ஐ.ஐ.டி., என்ற பெருமையை, சென்னை ஐ.ஐ.டி., பெற்றுள்ளது. சான்சிபார் ஐ.ஐ.டி., யில், வரும் அக்டோபர் மாதம் வகுப்புகள் துவங்க உள்ளன. இதையடுத்து, சான்சிபார் ஐ.ஐ.டி., இயக்குனராக, சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவியும், பேராசிரியையுமான ப்ரீத்தி அகாலயம், 49, சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். ஐ.ஐ.டி.,க்கு பெண் இயக்குனர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை.இந்நிலையில் நேற்று ப்ரீத்தி கூறியதாவது:
ஐ.ஐ.டி.,க்களில், பெண்கள் சிறுபான்மையினராக உள்ளனர் என்பது உண்மை தான். இதில், கடந்த சில ஆண்டுகளாக முன்னேற்றம் ஏற்பட்டாலும், அனைத்து மட்டங்களிலும் சில பிரச்னைகள் உள்ளன. நாங்கள் நிலையான வளர்ச்சி இலக்குகளை பின்பற்றுகிறோம். பாலின சமநிலையை கொண்டு வர வேண்டும் என்பது முக்கியமான இலக்குகளில் ஒன்று. அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
