UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM
ADDED : ஜூலை 18, 2023 11:23 AM
சென்னை:
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, நடப்பு 2023 - 24ம் கல்வி ஆண்டுக்கான பொது தேர்வை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2024ம் ஆண்டு பிப்ரவரி, 15 முதல் பொது தேர்வுகள் நடத்தப்படும்; ஏப்ரல் 10க்குள் முடிக்கப்படும். மொத்தம், 55 நாட்கள் தேர்வு நடத்த அட்டவணை தயாரிக்கப்பட உள்ளது. அதற்கேற்ப பாடங்களை நடத்தி, மாணவர்களை பள்ளிகள் தயார்படுத்த வேண்டும்.பிற கல்வித் துறையினர், போட்டி தேர்வு நடத்தும் அரசு துறைகள் ஆகியவை, சி.பி.எஸ்.இ.,யின் இந்த தேர்வு அட்டவணையை கருத்தில் வைத்து, தங்கள் தேர்வு அட்டவணையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
