UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM
ADDED : ஜூலை 18, 2023 11:40 AM
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களில், சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தான் அதிக இடங்களை பெற்று வந்தனர். நீட் தேர்வு வந்த பிறகும், அரசு பள்ளி மாணவர்கள் ஒற்றை இலக்கத்தில் தான் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு அமல்படுத்தியது. இதனால் நீட் தேர்வில் 300க்கும் அதிகமான மதிப்பெண் பெறும் அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த மாதம் 25ம் தேதி துவங்க வாய்ப்புள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு, 473 எம்.பி.பி.எஸ்., 133 பி.டி.எஸ்., என, 606 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2,993 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் 300 மதிப்பெண்களுக்கு மேல் 1,170 மாணவர்கள் பெற்றுள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் இடங்கள் பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில், 37,672 பேர் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இதனால், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கட் ஆப் மதிப்பெண்ணும் 40 வரை கூட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
