UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM
ADDED : ஜூலை 23, 2023 10:37 AM
திருப்பூர்:
மூன்று வணிக வரி மாவட்டங்களை உள்ளடக்கிய திருப்பூர் வணிக வரி கோட்டம் நேற்றுமுதல் செயல்பாட்டை துவக்கியுள்ளது. கடந்த, 2021ல் நடந்த சட்டமன்ற கூட்டத்தில், திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து, 21 சரகங்கள்; 3 வணிக வரி மாவட்டங்களுடன் திருப்பூர் வணிக வரி கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஏழு வணிக வரி கோட்ட அலுவலகங்களை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.திருப்பூரில், அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், புதிய வணிக வரி கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. வணிக வரித்துறை இணைகமிஷனர் (பொறுப்பு) லட்சுமி பவ்யா தனிரு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். எந்தெந்த சரகம்?
மூன்று வணிக வரி மாவட்டங்களை உள்ளடக்கி, திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வரிக வரி மாவட்டம் 1ல், அனுப்பர்பாளையம், அவிநாசி, காந்திநகர், பொங்கலுார், திருப்பூர் வடக்கு - 1, திருப்பூர் வடக்கு - 2, திருப்பூர் ரூரல் - 1, திருப்பூர் ரூரல் 2 சரகங்கள் உள்ளன.வணிக வரி மாவட்டம் 2 ல், திருப்பூர் தெற்கு, திருப்பூர் பஜார், திருப்பூர் சென்ட்ரல் - 1, சென்ட்ரல் 2, கொங்குநகர், லட்சுமி நகர்.வேறு மாவட்டத்திலிருந்த திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டு, புதிதாக திருப்பூர் வணிக வரி மாவட்டம் - 3 உருவாக்கப்பட்டுள்ளது. வணிக வரி மாவட்டம் 3 ல், தாராபுரம், காங்கயம், பல்லடம் - 1, பல்லடம் - 2, வெள்ளகோவில், உடுமலை வடக்கு, உடுமலை தெற்கு பகுதிகள் இடம்பெற்றுள்ளன.அதிகாரிகள் நியமனம் அவசியம்புதிதாக உருவாகியுள்ள திருப்பூர் வணிக வரி கோட்டத்துக்கு, கூடுதல் பொறுப்பாகவே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு வணிக வரி நிர்வாகம் மற்றும் அமலாக்க பிரிவு இணை கமிஷனர்களே, கூடுதல் பொறுப்பாக திருப்பூர் கோட்டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல், ஒரே துணை கமிஷனரே, மூன்று திருப்பூர் வணிக வரி மாவட்டத்துக்கும் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்; ஈரோடு அதிகாரிகள், வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே திருப்பூர் வந்து பணிகளை கவனிப்பர்.விரைவில், அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே, திருப்பூர் வணிக வரி கோட்டத்தை முழு செயல்பாட்டுக்கு கொண்டு வரமுடியும்.
