UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM
ADDED : ஜூலை 25, 2023 09:42 AM
கம்பம்:
வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகத்துறைகளில் பணிபுரியும் உதவி அலுவலர்களை ஒருங்கிணைக்க எடுத்த நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன.இந்த மூன்று துறைகளில் உள்ள உதவி அலுவலர்கள் தற்போது கிராமத்திற்கு ஒருவர் வீதம் பணியாற்றி வருகிறார்கள். 2023 - 2024 ம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்த அமைச்சர், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என பெயரிடப்பட்ட திட்டத்தை அறிவித்தார். அத்திட்டத்தின்படி 3 முதல் நான்கு ஊராட்சிகளுக்கு ஒரு விரிவாக்க அலுவலர் நியமிக்கப்படுவார் என்றும், அவர் வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம், பொறியியல் சார்ந்த பணிகளை கிராம அளவில் ஒருங்கிணைத்து பணிபுரிவார் என்றும் அறிவிக்கப்பட்டது.அதன்படி ஒவ்வொரு உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் பணிபுரியும் உதவி வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிக அலுவலர்களின் பட்டியலை வேளாண் ஆணையரகத்திற்கு அனுப்ப இணை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பின் எக்டேர், வருவாய் கிராமம் அடிப்படையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இறுதியில் பிரச்னை ஏற்படாத வகையில் மாவட்ட அதிகாரிகளே நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதுவரை அந்த பணிகளில் முன்னேற்றம் இல்லை.வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:
புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நிர்வாக சிக்கல்கள் இருப்பதால், பழைய நிலையே தொடர்கிறது. ஒருங்கிணைத்தால் உடனடியாக செயல்படுத்த முடியாது. இதற்கு காரணம் வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு தனித்தனியாக தொழில்நுட்ப பயிற்சி தேவைப்படும், எனவே இப்போதைக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றனர்.
