UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM
ADDED : ஜூலை 26, 2023 06:40 AM
புதுடில்லி:
குடிசைப் பகுதிகள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 500 வாட்டர் ஏ.டி.எம்., நிறுவ திட்டமிட்டுள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.டில்லியின் மாயாபுரியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆய்வு செய்தார். பின், அங்கு அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்., இயந்திரத்தை திறந்து வைத்தார். அப்போது, நிருபர்களிடம் பேசிய கெஜ்ரிவால், தற்போது நான்கு வாட்டர் ஏ.டி.எம்.,கள் டில்லியில் நிறுவப்பட்டுள்ளன. மாநகர் முழுதும் குடிசைப் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், 500 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்., அமைக்க முடிவு செய்துள்ளோம்.ஒவ்வொரு நபருக்கும் ஏ.டி.எம்.,களில் இருந்து ஒரு நாளைக்கு, 20 லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில் அட்டை வழங்கப்படும். ஆழ்குழாய் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீர், சுத்திகரிக்கப்பட்டு, வாட்டர் ஏ.டி.எம்.,கள் வாயிலாக வினியோகம் செய்யப்படும் என்றார்.
