இடமாற்றம் என்ற பெயரில் தமிழ் ஆசிரியர்களுக்கு வஞ்சனை
இடமாற்றம் என்ற பெயரில் தமிழ் ஆசிரியர்களுக்கு வஞ்சனை
UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM
ADDED : ஜூலை 26, 2023 09:58 AM
தங்கவயல்:
இடமாற்றம் என்ற பெயரில் தமிழாசிரியர்களை கல்வித் துறை வஞ்சிக்கிறது என்று கர்நாடக தமிழாசிரியர்கள் சங்கத் தலைவர் தனஞ்செயன் குற்றம் சாட்டினார்.தங்கவயலில் பணியாற்றிய தமிழ் ஆசிரியை நிர்மல குமாரி நேற்று முன்தினம் காலமானார். உரிகம், எலக்ட்ரிக்கல் காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு கர்நாடக மாநில தமிழாசிரியர்கள் சங்க தலைவர் தனஞ்செயன் தலைமையில் நேற்று ஆசிரியர்கள் சென்று, அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.தனஞ்செயன் பேசியதாவது:
மாணவர்கள் வாழ்வில் அறிவு ஒளியேற்றி வைத்த ஆசிரியை படத்திற்கு முன், மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கிறோம். தமிழ் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் இடமாற்றம் என்ற பெயரில் வஞ்சிக்கப்படுகின்றனர். இது, மிகுந்த வருத்தம் அளிக்கிறது. கவுன்சிலிங் பெயரில் பெரும் மோசடி நடந்து வருகிறது. ஓராண்டில் ஓய்வு பெறுபவரை இடமாற்றம் செய்து அலைக்கழிக்க செய்யலாமா.தங்கவயலில் அரசுப் பள்ளியில் உள்ள தமிழ் ஆசிரியைகளை, தமிழே இல்லாத பல மைல்களுக்கு அப்பால் உள்ள கன்னடப் பள்ளிகளுக்கு கன்னடம் கற்றுத்தர இடமாற்றம் செய்துள்ளனர்.அதே கன்னடத்தை கற்பிக்க, தங்கவயலில் உள்ள கன்னடப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்திருக்கலாமே. தமிழாசிரியைகளை வஞ்சிக்கும் நிலை மாற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பேராசிரியர் கிருஷ்ணகுமார் பேசுகையில், கர்நாடக மாநிலத்தில், சிறுபான்மை மொழிக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆசிரியர் - ஆசிரியைகள் இடமாற்ற கவுன்சிலிங்கின் போது உடல்நலம், வயது வரம்பு, மொழி வழி ஆகியவை குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். கர்நாடக மாநில தமிழாசிரியர்கள் சங்க பொருளாளர் பிரபாகரன், தமிழர் பாதுகாப்புக் குழு தலைவர் புஷ்பராஜ், தமிழ்வழிக் கல்வி ஆசிரியைகள் நிர்மலா, பாரதி, கீதாஸ்ரீ, லோகநாயகி, அமுதா, கஸ்தூரி உட்பட பலர் பங்கேற்றனர்.
