தேர்தல் பணியில் ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து கடிதம்
தேர்தல் பணியில் ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து கடிதம்
UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM
ADDED : ஜூலை 29, 2023 10:58 AM
பெங்களூரு:
தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.தொடக்க பள்ளி கல்வித்துறை கமிஷனர் காவேரி, பெங்களூரு மாநகராட்சியின் சிறப்பு தேர்தல் கமிஷனருக்கு, எழுதிய கடிதம்:வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்வது உட்பட தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதால், பள்ளிகளில் பாடம் நடத்துவது கஷ்டமாகிறது. ஆசிரியர்களை கல்வி சாராத பணிகளுக்கு நியமிக்க கூடாது என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. வகுப்புகள் நடத்த, ஆண்டில் குறைந்தபட்சம், 180 நாட்களாவது கிடைக்க வேண்டும். ஆனால் இத்தனை நாட்கள் கிடைப்பதில்லை. இதன் விளைவாக சிறார்களின் கல்வி பாதிப்படைகிறது. ஐந்தாவது, எட்டாவது, 10வது வகுப்புகளுக்கு மாநில அளவிலான தேர்வு நடப்பதால், மாணவ - மாணவியருக்கு பாடங்கள் கற்பிப்பதில், ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. இதை மனதில் கொண்டே, ஆசிரியர்களை கல்வி சாராத பணிகளுக்கு, நியமிக்க கூடாது என உச்சநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் மட்டுமின்றி, மாநில அரசும் உத்தரவிட்டுள்ளன. ஒருவேளை ஆசிரியர்களை தேர்தல் பணிகளுக்கு நியமித்தால் அது நீதிமன்றங்களின் உத்தரவை மீறியதாக ஆகும். எனவே தொடக்க, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களை, தேர்தல் பணிகளுக்கு நியமிக்க கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
