UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM
ADDED : ஜூலை 29, 2023 04:41 PM
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வாழ்ந்த இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார். அங்கு கலாம் நினைவாக வைக்கப்பட்டு இருந்த பொருட்களை பார்வையிட்ட அவருக்கு, குடும்பத்தினர் தேநீர் விருந்து அளித்தனர்.புத்தகம் வெளியீடு
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகமான, அப்துல் கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை என்ற தலைப்பில், அவரது அண்ணன் மகள் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர், விண்வெளி விஞ்ஞானி ஓய்.எஸ்.ராஜன் ஆகியோர் எழுதி உள்ளனர். இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பை ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக, விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த அப்துல் கலாம் படத்திற்கு மலர் தூவி அமித்ஷா மரியாதை செலுத்தினார். பிறகு அவர் பேசுகையில், மக்களின் ஜனாதிபதியாக கலாம் இருந்தார். கல்விக்காக தன்னை அர்ப்பணித்த மாபெரும் மனிதர். கலாமின் சிந்தனைகளை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. கலாமின் சிந்தனைகளை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. கலாம் விஞ்ஞானியாக இருந்தாலும், ஆன்மிகத்திலும் ஆர்வம் கொண்டவர். 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவ கலாமின் அடிப்படை கொள்கைகளே காரணம். நாட்டிற்காக மட்டுமே கலாம் சிந்தித்தார். செயல்பட்டார். விண்வெளி துறையில் இந்தியா ஆற்றிய சாதனைகளுக்கு கலாமே காரணம் இவ்வாறு அமித்ஷா பேசினார்.விவேகானந்தர் இல்லம்
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தை அமித்ஷா பார்வையிட்டார்.
