UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM
ADDED : ஜூலை 30, 2023 09:48 AM
மாநில அரசின் வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி திட்டம் தொய்வடைந்துள்ளது என விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை செயல்பாடுகளை மேம்படுத்த, வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி, பொறுப்பு அலுவலராகநியமனம் செய்யப்படுவர் என மாநில அரசு அறிவித்தது. அதன்படி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில், புதிதாக வெளியிடப்பட்ட உயர் மகசூல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்குவது, நானோ தொழில்நுட்ப உரங்களை பயன்படுத்துவது, ட்ரோன் வாயிலாக உரமிடுவது உட்பட பல விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் செயல்படும் நெல், காய்கறி, பழங்கள், தேங்காய், தோட்டக்கலை, வேளாண்மை உட்பட பல்வேறு பிரிவு சார்ந்த ஆராய்ச்சி நிலையங்கள், கே.வி.கே., எனப்படும் வேளாண் அறிவியல் நிலையங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டு, மாநிலத்தில் உள்ள, 388 வட்டாரத்துக்கும் ஒரு விஞ்ஞானி என, பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களது செயல்பாடுகள் எதிர்பார்த்தளவில் இல்லை என்பது விவசாயிகள் கூறுகின்றனர். தங்கள் துறை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதோடு, தங்களது பணியை முடித்துக் கொள்கின்றனர். தோட்டங்களுக்கு சென்று தொழில்நுட்ப ஆலோசனை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
