ஆங்கிலேயர் ஏற்படுத்திய ஆரியர் - திராவிடர் வாதம் கவர்னர் ரவி பேச்சு
ஆங்கிலேயர் ஏற்படுத்திய ஆரியர் - திராவிடர் வாதம் கவர்னர் ரவி பேச்சு
UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM
ADDED : ஜூலை 30, 2023 09:58 AM
சென்னை:
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் கருத்து மற்றும் அவரின் சேவைகளை, பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் பாடமாக எடுத்து செல்ல வேண்டும் என தமிழக கவர்னர் ரவி பேசினார். ஏகாத்ம மானவவாத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நுால் தொகுப்பு வெளியீட்டு விழா, சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலை பள்ளியில் நேற்று மாலை நடந்தது. அதில் கவர்னர் ரவி, நுால் தொகுப்பை வெளியிட்டார். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ஆராய்ச்சி நிறுவன தலைவர் மகேஷ் சந்திரா சர்மா, இரட்டைமலை சீனிவாசன் மற்றும் பண்டிதர் அயோத்திதாசர் கொள்ளு பேத்தி நிர்மலா அருள்பிரகாஷ், இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் பங்கேற்றனர். குருமூர்த்தி பேசும்போது, தீன்தயாள் உபாத்யாயா, அரசியலில் பன்முக தன்மையுடன் இருந்தார். அவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு உயர்ந்தவர். சமூகம் பற்றி மட்டுமல்ல, தனிமனிதன், நாடு பற்றியும் பேசினார், என்றார்.கவர்னர் ரவி பேசியதாவது:
கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தீன்தயாள் உபாத்யாயா செயல்பாடுகளும், தத்துவங்களும் நம் அன்றாட வாழ்வில் வெளிப்பட்டபடி உள்ளது. நம் நாடு முன்னோக்கி செல்ல பாடுபட்டவர் தீன்தயாள் உபாத்யாயா. அவர், அனைவரும் ஒன்று தான் என்பதை வலியுறுத்தினார். இந்த பிரபஞ்சத்தை, ஒரே பரமேஸ்வரன் தான் படைத்தார். நாம், பல ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன் தான் இருந்தோம். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் குறிப்பாக, 400 ஆண்டுகள் தான் அடிமையாக இருந்தோம்.மேற்கத்தியவர்களிடம் ராணுவ பலம், தொழில்புரட்சி உள்ளிட்டவை இருந்தன. அவை, நம்மை விட உயர்ந்தது என்று நினைத்து, வேறு வழியில்லாமல் நாம் ஏற்று கொள்ளும் நிலை ஏற்பட்டது. தற்போது, அதுவே நம் கலாசாரமாக மாறிவிட்டது. அவர்களால் தான் நம்மிடையே பிரிவினை ஏற்பட்டது. ஆரியர், திராவிடர் என்ற வாதம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. இது, பிரிவினையை ஏற்படுத்தியது. தற்போது, மொழி பெயரில் சிறுபான்மை மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. பலர் பள்ளிகளை நடத்துகின்றனர். அதில் அவர்களின் தாய் மொழியில் கூட கற்று தருவதில்லை.ஒரே நிலத்தில் இருந்தவர்கள் கூட, மொழியால் தங்களை இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று கருதுகின்றனர். ஆங்கிலேயர்களால் பல தொல்லைகள் ஏற்பட்டன. உலகளாவிய ஒருமைப்பாடு பற்றிய கூறிய ஒரே நாடு இந்தியா தான். இந்தியா, உலகிற்கு ஒளி காட்டுகிறது. நம் பாரதம் வலுவாக இருக்க வேண்டும். அதற்கு தீன்தயாள் உபாத்யாயாவின் தத்துவம் இருக்க வேண்டும். அவரின் நுால் தொகுப்புகளை வெளியிடுவது மட்டும் அல்லாமல், மேலும் பல ஆய்வு மேற்கொண்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் தீன்தயாள் உபாத்யாயாவின் கருத்து, ஆற்றிய சேவைகளை, பாடமாக எடுத்துச் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
