UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM
ADDED : ஜூலை 30, 2023 10:01 AM
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தற்போது, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் நாளை, 5:00 மணி வரை பதிவு செய்து, கட்டணம் செலுத்தி இடங்களை தேர்வு செய்யலாம். ஆக., 1, 2ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான விபரம் ஆக., 3ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு நடத்தும் ஆன்லைன் கவுன்சிலிங், அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாணவர்கள் ஆக., 3ம் தேதி மாலை, 5:00 மணி வரை பதிவு செய்து, இடங்களை தேர்வு செய்யலாம். ஆக., 4,5ம் தேதிகளில் கல்லுாரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 6ம் தேதி அதற்கான பட்டியல் வெளியிடப்படும். இடங்கள் பெற்றவர்கள் ஆணையை பதிவிறக்கம் செய்து, ஆக., 11ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், கல்லுாரிகளில் சேர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
