கலந்தாய்வில் முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தல்: சென்டாக்
கலந்தாய்வில் முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தல்: சென்டாக்
UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM
ADDED : ஜூலை 31, 2023 03:24 PM
புதுச்சேரி:
இரண்டாம் கட்ட இன்ஜினியரிங் கலை அறிவியல், வணிகவியல் கணினி கலந்தாய்வில் பங்கேற்க 2ம் தேதிக்குள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு சென்டாக் விண்ணப்பங்களை பெற்றது. முதற்கட்டமாக கலை அறிவியல், வணிகவியல், இன்ஜினியரிங் படிப்புகளுக்கு கணினி கலந்தாய்வு நடத்தி இடம் ஒதுக்கப்பட்டது. இடம் கிடைத்த மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்த நிலையில் இரண்டாம் கட்ட கணினி கலந்தாய்வு நடத்த சென்டாக் முடிவு செய்துள்ளது. எனவே, இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் இரண்டாம் கணினி கலந்தாய்வில் பங்கேற்க, பாட பிரிவுகளை முன்னுரிமை கொடுக்கலாம். பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., கால்நடை அறிவியல், அக்ரி, பி.பார்ம், பி.பி.டி., பி.எஸ்.சி.,நர்சிங், எம்.எல்.டி., எம்.ஆர்.ஐ.டி., எம்.ஐ.டி., டி.டி.,சி.டி., பி.ஏ., உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகளான டி.ஜி.என்.எம்., டி.ஏ.பி.டி., டி.எம்.எல்.டி., டி.சி.சி.டி., டி.டி.டி., இன்ஜினியரிங், ஐந்தாண்டு சட்ட படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் வரும் 2ம் தேதி காலை 10:00 மணிக்குள் பாட பிரிவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் நீட் அல்லாத யூ.ஜி., படிப்புகளுக்கான பாட பிரிவு முன்னுரிமை இணைத்தே சீட் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. எனவே கவனமாக பாட பிரிவு முன்னுரிமைகளை தேர்ந்தெடுத்து பட்டியலிட வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது. இரண்டாம் கட்ட கணினி கலந்தாய்வு முன்னுரிமை தொடர்பாக மாணவர்களின் இ-மெயில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டால், முதற்கட்ட கலந்தாய்வில் கிடைத்த சீட் தானாகவே ரத்தாகிவிடும் என சென்டாக் தெரிவித்துள்ளது.
