புத்தக கண்காட்சியில் நாடகமாக அரங்கேறிய ஐந்து சிறுகதைகள்
புத்தக கண்காட்சியில் நாடகமாக அரங்கேறிய ஐந்து சிறுகதைகள்
UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM
ADDED : ஜூலை 31, 2023 06:10 PM
கோவை:
கோவை கொடிசியா வணிக வளாகத்தில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இதில் தினமும் பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதில் கோமல் தியேட்டர் சார்பில், படைப்பாளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் எழுத்தளர்கள் ஜானகிராமன், சூடாமணி, சுஜாதா மற்றும் கோமல் சுவாமிநாதன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை மேடை நாடகமாக வடிவமைத்து அரங்கேற்றினர். சாந்தாராம், ஜெயசூர்யா, கிருத்திகா சபஜித் சசிக்குமார், கண்ணன் ருத்ராபதி, சஹஸ்ரநாம், ஆனந்தராம், தமிழ்ச்செல்வன், தங்கபாண்டியன் மாஸ்டர் அஷிக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். எழுத்து வடிவத்தில் படித்த சிறுகதைகளை, நாடக வடிவமாக பார்த்த வாசகர்கள் காட்சிக்கு காட்சி கைதட்டி ரசித்தனர்.இது குறித்து, நாடகங்கள் இயக்குனர் தாரணி கோமல் கூறியதாவது:
சிறுகதைகளை அதிகம் விரும்பி படிப்பேன். குறிப்பாக தி.ஜானகிராமன், ஆர்.சூடாமணி, சுஜாதா ஆகியோர் கதைகள் பிடிக்கும். என் அப்பா கோமல் சுவாமிநாதன் ஒரு நாடக இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகவும் இருந்ததால், எனக்கு நாடகங்கள் மீது அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. அவர் இருக்கும் வரை நாடகங்கள் இயக்கவில்லை. அவர் மறைவுக்கு பிறகு நான் இயக்கி வருகிறேன். இங்கு அரங்கேற்றப்பட்ட ஐந்து சிறுகதைகளில், இரண்டு சிறுகதைகளை ஏற்கனவே அரங்கேற்றி இருக்கிறேன். புதிதாக மூன்று சிறுகதைகளை, இந்த புத்தக கண்காட்சிக்காக இப்போது அரங்கேற்றி இருக்கிறேன். தொடர்ந்து, தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை நாடகமாக்கும் திட்டம் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
